ADDED : நவ 11, 2025 03:09 AM

டாக்கா: வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் நிறுவிய கிராமீன் வங்கி தலைமையகம் உட்பட பல்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டுகளை வீசினர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தையடுத்து, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவரானார்.
அங்கு தொடர்ந்து அரசியல் பதற்றம் நிலவி வரும் சூழலில், தலைநகர் டாக்காவில் உள்ள மிர்பூர் பகுதி யில் செயல்பட்டு வரும் முகமது யூனுஸ் நிறுவிய கிராமீன் வங்கி தலைமையகம் முன், பைக்கில் வந்த இரண்டு பேர் நேற்று அதிகாலை 3:45 மணியளவில் கையெறி குண்டுகளை வீசினர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதற்கிடையே நேற்று மட்டும், டாக்காவில் ஏழு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. மேலும் இரண்டு பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது.
வங்கதேசத்தில், வரும் பிப்ரவரியில் பொதுத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 13ம் தேதி ஷேக் ஹசீனா மீதான ஊழல் குற்றச்சாட்டில், அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு அளிக்கிறது.
இந்நிலையில், குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு இருப்பது அரசியல் பழிவாங்கல் என்றும், பயங்கரவாத செயல் என்றும் யூனுஸ் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

