மியான்மர் கிராமத்தில் ராணுவம் குண்டுவீச்சு: 40 பேர் பலி
மியான்மர் கிராமத்தில் ராணுவம் குண்டுவீச்சு: 40 பேர் பலி
ADDED : ஜன 10, 2025 02:14 AM

நெய்பிடாவ், மியான்மரில் பழங்குடியின ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தில் ராணுவத்தினர் குண்டு வீசி தாக்கியதில் 40 பேர் உயிரிழந்தனர்; 50 பேர் படுகாயமடைந்தனர்.
நம் அண்டை நாடான மியான்மரில், ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசை கவிழ்த்து, 2021ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
அப்போது ரக்கைன் பிராந்தியம் மோசமாக பாதிக்கப்பட்டது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்த 7.4 லட்சம் ரோஹிங்கயா முஸ்லிம்கள் தஞ்சம் தேடி வங்கதேசத்திற்கு சென்றனர்.
ராணுவத்துக்கு எதிராக நடந்த போராட்டங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டன.
அதன் பின் ராணுவத்திற்கு எதிராக நாட்டிலுள்ள ஆயுதம் ஏந்திய பழங்குடியின குழுக்கள் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர்.
நாட்டின் பல பகுதிகளை இந்த குழுக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. ரக்கைன் மாகாணத்துக்கு தன்னாட்சி அதிகாரம் என்பதும் இவர்களின் முக்கிய கோரிக்கை.
இந்நிலையில் ரக்கைன் மாகாணத்தில் உள்ள ராம்ரீ தீவை கடந்த ஆண்டு மார்ச்சில், 'அராகன் ஆர்மி' என்ற பழங்குடியின குழு கைப்பற்றியது.
இவர்கள் நன்கு பயிற்சி பெற்ற, ஆயுதம் ஏந்திய ரக்கைன் பழங்குடியின இயக்கத்தின் கிளை பிரிவினர்.
இந்த தீவில் உள்ள ஒரு கிராமத்தின் மீது நேற்று மியான்மர் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. சந்தையில் பொருட்கள் வாங்குவதற்காக கூடிய இடத்தில் குண்டு வீசப்பட்டது.
இதில் 40 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் இருந்த ஏராளமான கடைகள், வீடுகளும் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதையடுத்து, இந்த கிராமத்தில் மொபைல் போன் மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
இது குறித்து, 'அராகன் ஆர்மி' அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
மியான்மர் ராணுவத்தின் ஜெட் விமானங்கள் கிராமத்தில் குண்டு வீசின. இதில் உயிரிழந்தவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள். 500க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன.
எதற்காக இந்த கிராமத்தை குறிவைத்து தாக்கினர் என்ற விபரம் தெரியவில்லை. காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை. மருந்துகளும் பற்றாக்குறையாக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, அராகன் ஆர்மி அமைப்பின் தலைவர், இந்த தாக்குதலின் போது அந்த கிராமத்தில் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற விபரமும் தெரியவில்லை.