மியான்மர் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2,000 ஆக அதிகரிப்பு; முழுவீச்சில் நடக்கும் மீட்பு பணி
மியான்மர் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2,000 ஆக அதிகரிப்பு; முழுவீச்சில் நடக்கும் மீட்பு பணி
UPDATED : மார் 30, 2025 07:52 PM
ADDED : மார் 30, 2025 05:36 AM

பாங்காக்: மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 2,000 ஆக அதிகரித்துள்ளது. கட்டட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், 2021 பிப்ரவரியில், ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அப்போது முதல் அந்நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இந்நிலையில், மியான்மரின் சகாயிங் நகரின் வடமேற்கே, நேற்று முன்தினம், 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த 12 நிமிடங்களில், 6.4 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்தின் பாங்காக்கிலும் உணரப்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால், மியான்மர் தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.
வானுயர்ந்த கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்டவை தரைமட்டமாகின. பாலங்கள், அணைகள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 2,000 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 2,376 பேர் காயமடைந்து உள்ளதாகவும், 30 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மியான்மரில் ஆளும் ராணுவம் தெரிவித்துஉள்ளது.
முழு வீச்சில் மீட்பு
இந்த நிலநடுக்கத்தால், தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் மின்சாரம், தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்புப் படையினர் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நய்பிடா விமான நிலையத்தில் தகவல் தொடர்பு கோபுரம் இடிந்து விழுந்ததால், விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், யாங்கூன் நகருக்கு விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
கட்டட இடிபாடுகளால், மியான்மர் முழுதும் கான்கிரீட் குவியலாக காட்சியளிக்கிறது.
இடிபாடுகளை தோண்டத் தோண்ட உடல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.
தாய்லாந்து
மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம், அதன் அண்டை நாடான தாய்லாந்தின் பாங்காக்கிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இந்த நிலநடுக்கத்தால், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 26 பேர் காயமடைந்து உள்ளதாகவும், 47 பேரை காணவில்லை என்றும் பாங்காக் அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தாய்லாந்தில் உயிர்சேதத்தை விட, பொருட்சேதம் தான் அதிகம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மியான்மருக்கு, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேஷியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி உள்ளன. இந்த நாடுகளின் சார்பில் மியான்மருக்கு மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.