சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கியது மியான்மர்; தாய்லாந்தில் மண்ணுக்குள் புதைந்த கட்டடங்கள்
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கியது மியான்மர்; தாய்லாந்தில் மண்ணுக்குள் புதைந்த கட்டடங்கள்
ADDED : மார் 29, 2025 03:41 AM
பாங்காக் : மியான்மர் நாட்டில் நேற்று, இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகின. இது, தாய்லாந்திலும் மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. பாங்காக் நகரில் சில வானுயர்ந்த கட்டடங்கள் சரிந்து விழுந்தன. 180 பேர் உயிரிழந்தனர்; 250க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது.
சகாயிங் நகரின் வடமேற்கே, 16 கி.மீ., தொலைவில், 10 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், இதன் அதிர்வுகள் தென்மேற்கு சீனா மற்றும் தாய்லாந்தில் உணரப்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட 12 நிமிடங்களில், 6.4 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம், மியான்மரை அதிரச் செய்தது.
இது, மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டாலே அருகே ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நய்பிடாவ், மண்டாலே உட்பட ஆறு பிராந்தியங்களில் அவசரநிலையை மியான்மர் ராணுவ அரசு அறிவித்தது.
மண்டாலே நகரத்தின் அருகே இர்ரவாடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த, 90 ஆண்டுகள் பழமையான பாலம் உடைந்தது.