sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா மீது பொருளாதார தடை!: 'நேட்டோ' அமைப்பின் தலைவர் மிரட்டல்

/

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா மீது பொருளாதார தடை!: 'நேட்டோ' அமைப்பின் தலைவர் மிரட்டல்

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா மீது பொருளாதார தடை!: 'நேட்டோ' அமைப்பின் தலைவர் மிரட்டல்

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா மீது பொருளாதார தடை!: 'நேட்டோ' அமைப்பின் தலைவர் மிரட்டல்

7


UPDATED : ஜூலை 17, 2025 08:43 AM

ADDED : ஜூலை 17, 2025 01:34 AM

Google News

7

UPDATED : ஜூலை 17, 2025 08:43 AM ADDED : ஜூலை 17, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: 'ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டால் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் கடும் பொருளாதார தடையை எதிர்கொள்ள நேரிடும்' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பைத் தொடர்ந்து, 'நேட்டோ' அமைப்பின் தலைவர் மார்க் ருட்டேயும் மிரட்டல் விடுத்துள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. ராணுவ ஒத்துழைப்புக்கான, நேட்டோ எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போர் துவங்கியது. இந்த அமைப்பில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இதையடுத்து, ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடையை விதித்தன. ஆனால் இதை மீறி, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை வாங்கி வருகின்றன.

இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதிபராக பதவியேற்ற ஜனவரியிலிருந்து தற்போது வரை இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பலமுறை தொலைபேசியில் பேசியுள்ளார். இந்த பேச்சுக்கள் சில சமயங்களில் ஒரு மணிநேரத்திற்கு மேல் நீண்டுள்ளன.

ஆனாலும் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா குறைக்கவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உக்ரைனும் வலுவான பதிலடி தந்து வருகிறது.

புடினுடனான பேச்சு பலனளிக்காததால் சமீபத்தில் கோபமடைந்த டிரம்ப், 'காலையில் இனிக்க இனிக்க பேசும் அதிபர் புடின், இரவில் உக்ரைன் மீது குண்டு வீசுகிறார். போரை நிறுத்த ரஷ்யாவுக்கு 50 நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் அமைதி பேச்சுக்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில், 100 சதவீத வரி விதிக்கப்படும்' என எச்சரித்தார்.

மேலும், உக்ரைனுக்கு ஆயுதங்களை வினியோகிக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில், நேட்டோ அமைப்பின் பொதுச் செயலரும், நெதர்லாந்தின் முன்னாள் பிரதமருமான மார்க் ருட்டே, அமெரிக்கா சென்று, அதிபர் டிரம்ப் மற்றும் அந்நாட்டு எம்.பி.,க்களை சந்தித்து ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் உக்ரைனுக்கான ஆயுத தேவை குறித்து பேசினார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ரஷ்யாவின் பொருட்களை இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்கள், ரஷ்ய அதிபர் புடினை தொடர்பு கொண்டு பேசுங்கள். அமைதி பேச்சு குறித்த 50 நாட்கள் கெடுவை தீவிரமாக எடுத்துக் கொள்ள வலியுறுத்துங்கள்.

அந்த கெடுவிற்குள் ரஷ்யா போர் நிறுத்தத்துக்கு முன் வரவில்லை எனில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீத வரி உட்பட பொருளாதார தடை விதிக்கப்படும். இது அவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

உக்ரைனை பேச்சுகளில் வலுவான நிலையில் வைப்பதற்காக ஐரோப்பா நிதியை ஒருங்கிணைக்கும். அதிபர் டிரம்ப் உடனான புதிய ஒப்பந்தத்தின் கீழ், உக்ரைனுக்கு பெருமளவு ஆயுதங்களை அமெரிக்கா வழங்க உள்ளது.

இதில் வான் பாதுகாப்பு அமைப்புகள் மட்டுமின்றி, ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாஸ்கோவை தாக்க முடியுமா?

அதிபர் டிரம்ப் விசாரிப்புசமீபத்தில் ரஷ்ய அதிபர் புடினுடன் பேசிய பின் ஜூலை 4ம் தேதி உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை தொடர்புகொண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். அப்போது, 'ரஷ்யாவில் ஆழமாக ஊடுருவி தாக்குதல் நடத்துங்கள். நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கினால் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை தாக்க முடியுமா' என விசாரித்துள்ளார்.



ரஷ்யாவுக்கு சீனா ஆதரவு


போரை நிறுத்த ரஷ்யாவுக்கு அமெரிக்கா 50 நாட்கள் கெடு விதித்த அறிவிப்பு வெளியான நிலையில், சீனாவுக்கு சென்றுள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது, ஜின்பிங் கூறுகையில், “இரு நாடுகளும் சர்வதேச மன்றங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவை வலுப்படுத்த வேண்டும். பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களை முன்னிறுத்தி இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,” என்றார்.முன்னதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யி, ரஷ்யாவை போரில் தோற்க விடமாட்டோம். துாதரக ரீதியிலான ஆதரவை வழங்குவோம், என்றார்.








      Dinamalar
      Follow us