வேலை போச்சா, கவலை வேண்டாம்; நாங்க தரோம் 6 ஆயிரம் டாலர்: சூப்பர் திட்டம் அறிவித்தார் சிங்கப்பூர் பிரதமர்
வேலை போச்சா, கவலை வேண்டாம்; நாங்க தரோம் 6 ஆயிரம் டாலர்: சூப்பர் திட்டம் அறிவித்தார் சிங்கப்பூர் பிரதமர்
ADDED : ஆக 19, 2024 08:05 AM

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வேலை இழந்தோருக்கு உதவி செய்யும் வகையில், 6 மாதங்களுக்கு 6000 சிங்கப்பூர் டாலர் வரை (இந்திய மதிப்புபடி, ரூ. 3 லட்சத்து 83 ஆயிரம்) நிதியுதவி வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.
கோவிட் பாதிப்பு, சர்வதேச அளவில் தொழில் மந்த நிலை காரணமாக, சிங்கப்பூர் நாட்டில் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் 'ஸ்கில்ஸ்பியூச்சர்' ஆதரவுத் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது.
ரூ.3 லட்சத்து 83 ஆயிரம்
இந்த திட்டத்தின் மூலம் 6 மாதங்களுக்கு 6000 சிங்கப்பூர் டாலர் வரை (இந்திய மதிப்பு படி, ரூ. 3 லட்சத்து 83 ஆயிரம்) நிதியுதவி வழங்கப்படும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது தங்கள் நிறுவனங்கள் நஷ்டம் அடையும் போது வேலை இழப்பவர்களுக்கு இந்த திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும்.
பிரதமர் சொல்வது என்ன?
இந்த ஆண்டின், தேசிய தினப் பேரணியில் பிரதமர் லாரன்ஸ் வோங் பேசியதாவது: வேலையை இழந்தோருக்கு, ஸ்கில்ஸ்பியூச்சர் ஆதரவுத் திட்டத்தின் கீழ், ஆறு மாதங்கள் வரை நிதியுதவி வழங்க உள்ளோம். இந்த பணம், அவர்கள் வேலை தேடுவதற்கும், தொழில் பயிற்சி மேற்கொள்வதற்கும் உதவிகரமாக இருக்கும். நாங்கள் உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம்.
சில நாடுகளில் வேலையில்லாதோருக்கான காப்புறுதித் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. அதை விட சிறப்பாக செய்ய சிங்கப்பூர் அரசு விரும்புகிறது. ஸ்கில்ஸ்பியூச்சர் திட்டம் குறித்து விவரங்களை, விரைவில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வெளியிடுவார். இவ்வாறு அவர் பேசினார்.

