UPDATED : செப் 10, 2025 03:38 AM
ADDED : செப் 10, 2025 03:35 AM

இமயமலை அடிவார நாடான நேபாளம் வன்முறைகளால் பற்றி எரிந்து வருகிறது. சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியதால், நேபாளம் முழுதும் போர்க்களம் போல காட்சியளிக்கிறது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்திருக்கின்றனர்; பலர் காயமடைந்திருக்கின்றனர்.
இந்தச் சூழலில், வன்முறை சம்பவங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று, மூன்று அமைச்சர்கள் நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்த நிலையில், பிரதமர் கே.பி. சர்மா ஒலியும் பதவியில் இருந்து விலகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சமூக ஊடகங்கள் மீதான தடை, நேபாளத்தின் அரசியலையே புரட்டி போடும் அளவுக்கு பூதாகரமானதா? உண்மையான பின்னணி என்ன? இவ்வாறு பல கேள்விகள் எழுகின்றன.
சமூக ஊடகங்கள் மீதான தடை, பார்ப்பதற்கு உள்நாட்டு ஒழுங்குமுறை விவகாரம் போல் இருக்கலாம். ஆனால், உண்மையில் இந்த விவகாரத்தின் பின்னணியில் இருப்பது மிகப் பெரிய சர்வதேச அரசியல். அதற்கு முக்கிய காரணம் சீனாவும், அமெரிக்காவும் தான்.
தற்போது உலகெங்கும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பெருகியுள்ளன. அதுபோலவே, சமூக ஊடகங்களும் அதிகளவில் உள்ளன.
எங்கோ ஒரு நாட்டில் இருந்து, உலகெங்கும் இந்த சமூக வலைதள நிறுவனங்கள் ஆட்டிப் படைக்கின்றன.
ஒரு பக்கம் டிஜிட்டல் மயமாக்கல் பல வசதிகளை அளிக்கிறது. அதே நேரத்தில் மோசடிக்காரர்களும் இந்தத் தொழில்நுட்பத்தை பயன் படுத்தி, பல மோசடிகளை செய்கின்றனர்.
குறிப்பாக, இணையதளத்தில் புகுந்து தகவல்களை திருடுவது போன்றவற்றை கூறலாம். இவ்வாறு மோசடிகளில் இருந்து தப்பிக்க உதவுகிறது, டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்புகள்.
நம் அண்டை நாடான சீனா, டிஜிட்டல் பாதுகாப்புக்காக, ஜி.எஸ்.ஐ., எனப்படும் சர்வதேச பாதுகாப்பு முன்னெடுப்பு என்ற திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.
திட்டவட்டம் அதே போல், ஐ.பி.எஸ்., எனப்படும் இந்தோ - பசிபிக் உத்தி என்ற பெயரில் அமெரிக்காவும் தன் பங்குக்கு ஒரு டிஜிட்டல் பாதுகாப்பு கவச முறையை உருவாக்கி இருக்கிறது.
இந்த டிஜிட்டல் கவசங்களை வைத்து, நேபாளத்தை தங்களுக்கு கீழ் கொண்டு வர சீனாவும், அமெரிக்காவும் முயன்று வருகின்றன.
இதில், சீனாவின் ஜி.எஸ்.ஐ., என்பது விரிவான பாதுகாப்பு டிஜிட்டல் கட்டமைப்பு.
இதனை சீன அதிபர் ஷீ ஜின்பிங் தான் முன் மொழிந்திருந்தார். சர்வதேச டிஜிட்டல் பாதுகாப்புக்கும், பரஸ்பர மரியாதைக்கும் இந்த கட்டமைப்பு உறுதுணையாக இருக்கும் என்ற வாக்குறுதியை அவர் அளித்திருந்தார்.
நேரடியாக சொல்வதென்றால், அமெரிக்காவின் டிஜிட்டல் பாதுகாப்புக்கு மாற்றாக ஜி.எஸ்.ஐ., உருவாக்கப்பட்டது. இதை வைத்து நேபாளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தெற்கு ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தலாம் என கருதுகிறது சீனா.
எனவே, ஜி.எஸ்.ஐ.,யில் இணையுமாறு நேபாளத்திற்கு அவ்வப்போது சீனா அழுத்தம் கொடுத்து வந்தது. தவிர, ஜி.எஸ்.ஐ.,க்கு நேபாளம் ஆதரவு தெரிவித்துவிட்டது என, அறிக்கைகளையும் வெளியிட்டது.
ஆனால், திடீர் திருப்புமுனையாக, சீனாவின் இந்த கருத்தை நேபாளம் பகிரங்கமாக மறுத்தது. பிரதமர் சர்மா ஒலி முதல் வெளியுறவு செயலர் வரை, நேபாளத்தில் வெளியுறவு கொள்கைக்கு எதிராக எந்தவொரு ராணுவ கூட்டணியிலோ அல்லது சர்வதேச அரசியல் சார்ந்த கூட்டணியிலோ சேர முடியாது என, திட்டவட்டமாக அறிவித்தனர்.
முட்டுக்கட்டை தங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இமயமலை அடிவார நாட்டை இழுத்துவிடலாம் என்ற சீனாவின் முயற்சிகளுக்கு, நேபாளத்தின் இந்த நிலைப்பாடு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தது.
இந்தச் சூழலில் உள்நாட்டு சட்டங்களை மதிக்காத காரணத்தினால், வெளிநாட்டு சமூக ஊடக தளங்களுக்கு தடை விதித்ததாக நேபாளம் அறிவித்தது. ஆனால், இந்த தடை வேறு விதமான கதைகளை கட்டமைத்தது. சீனாவின் சொந்த இணையதள நிர்வாகத்தை பிரதிபலிக்கும் வகையில், டிஜிட்டல் இறையாண்மை அடகு வைக்கப்பட்டு விட்டதாக கூறி, போராட்டம் வெடித்தது.
சீனாவின் ஜி.எஸ்.ஐ., அமைப்பில் அதிகாரப்பூர்வமாக சேராவிட்டாலும், அந்நாட்டை சமாதானப்படுத்தவும், அதன் கோரிக்கைகளை ஏற்கும் வகையிலும் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் பரவலாக கருத்துக்கள் பரவின.
இது போதாதென்று, மற்றொரு புறம், அமெரிக்காவின் ஐ.பி.எஸ்., டிஜிட்டல் கட்டமைப்பை ஏற்கும் வகையில், அந்நாட்டிடம் இருந்து பல கோடி ரூபாய் மானியத்தை நேபாள அரசு ஏற்றுக் கொண்டதாகவும் செய்திகள் பரவின.
சீனாவை ஓரங்கட்டிவிட்டு, அமெரிக்க கூட்டணிக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் வகையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பேசப்பட்டன. அதன் விளைவாகவே போராட்டம் வெடித்து பார்லிமென்ட் வரை எதிரொலித்தது.
இந்த சித்தாந்த போர் நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட களமாக அமைந்தது சமூக ஊடகங்கள் தான். 'பேஸ்புக், யு டியூப்' போன்ற தளங்களில் சீன ஆதரவாளர்கள் பொய்யான தகவல்களை பரப்பினர்.
குறிப்பாக அமெரிக்காவின் சில திட்டங்கள் நேபாளத்தின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதனால், வெளிநாட்டு கட்டுக்கதைகளை உடைத்தெறிய நேபாள அரசு கையில் எடுத்த ஆயுதம் தான் சமூக ஊடகங்கள் மீதான தடை.
ஆனால், இருபுறமும் கூர்மை கொண்ட கத்தி போல, அந்த தடை செயலாற்றி, தற்போது அரசுக்கே வேட்டு வைத் திருக்கிறது.
--- நமது சிறப்பு நிருபர் -