நியூ ஆர்லியன்ஸ் தாக்குதலில் 15 பேர் பலி; வாகனத்தில் வந்து மோதியவர் ஐ.எஸ்., பயங்கரவாதி
நியூ ஆர்லியன்ஸ் தாக்குதலில் 15 பேர் பலி; வாகனத்தில் வந்து மோதியவர் ஐ.எஸ்., பயங்கரவாதி
ADDED : ஜன 02, 2025 09:06 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, 15 பேர் உயிரிழந்த சோகத்திற்கு, காரணமானவர் 42 வயதான ஷம்சுத் டின் ஜாபர் ராணுவ வீரர் என்பதும், அவர் வந்த வாகனத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் கொடி கட்டி இருந்ததும் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் லுாசியானா மாகாணத்தின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று களைகட்டின. அந்த நகரின் முக்கிய சுற்றுலா தலமான போர்பன் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடினர்.
அப்போது அங்கு வந்த ஒரு வேன், கூட்டத்திற்குள் திடீரென புகுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், அங்கும் இங்கும் அலறியபடி ஓடினர். தகவலறிந்து வந்த போலீசார், பதில் தாக்குதல் நடத்தினர். இதில், டிரைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில், 15 பேர் பலியாகினர்; இரண்டு போலீசார் உட்பட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சூழலில், விபத்திற்கு காரணமானவர் 42 வயதான ஷம்சுத் டின் ஜாபர் ராணுவ வீரர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் ஓட்டி வந்த வாகனத்தில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் கொடி இருந்தது தெரியவந்துள்ளது.
யார் அந்த நபர்?
* 2007ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் அமெரிக்கா ராணுவத்தில் பணிபுரிந்தவர் தான் ஷம்சுத் டின் ஜாபர். இவருக்கு வயது 42.
* இவர் ராணுவ பாராட்டு பதக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பு சேவை பதக்கம் உட்பட பல பாராட்டுகளை பெற்றுள்ளார்.
* இவர் தகவல் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றி உள்ளார்.
* 2009ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு ஜனவரி வரை ஆப்கானிஸ்தானில் ஒரு வருடம் பணியாற்றி உள்ளார்.
சம்பவ இடத்தில், வெடிபொருள் கண்டறியப்பட்டுள்ளது. அதை, ஆய்வுக்கு உட்படுத்தி, புலனாய்வு அமைப்பான, எப்.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், விபத்தை ஏற்படுத்தியவர் குறித்து பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஷம்சுத் டின் ஜாபருடன் வேறு சிலரும் இதில் ஈடுபட்டிருக்கலாம் என எப்.பி.ஐ. அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.

