'உலகை' வென்றது நியூசிலாந்து; தென் ஆப்ரிக்க பெண்கள் ஏமாற்றம்
'உலகை' வென்றது நியூசிலாந்து; தென் ஆப்ரிக்க பெண்கள் ஏமாற்றம்
UPDATED : அக் 20, 2024 11:53 PM
ADDED : அக் 20, 2024 11:51 PM

துபாய் : 'டி-20' உலக கோப்பையை முதல் முறையாக வென்றது நியூசிலாந்து பெண்கள் அணி. பைனலில் 32 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) பெண்களுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 9வது சீசன் நடந்தது. இன்று(அக்.,20), துபாயில் நடந்த பைனலில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் லாரா வுல்வார்ட் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணிக்கு ஜார்ஜியா (9) ஏமாற்றினார். சுசி பேட்ஸ், 31 பந்தில் 32 ரன் எடுத்து கைகொடுத்தார். கேப்டன் சோபி டெவின் (6) சோபிக்கவில்லை. பின் இணைந்த அமேலியா கெர், புரூக் ஹாலிடே ஜோடி நம்பிக்கை தந்தது. நான்காவது விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்த போது ஹாலிடே (38) அவுட்டானார். அமேலியா கெர் 43 ரன் விளாசினார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்தது. கிரீன் (12), இசபெல்லா (3) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் மலாபா 2 விக்கெட் வீழ்த்தினார்.
லாரா ஆறுதல்
சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் லாரா வுல்வார்ட் (33), டஸ்மின் பிரிட்ஸ் (17) நல்ல துவக்கம் கொடுத்தனர். அனிகி பாஷ் (9), மரிஜானே காப் (8), நாடின் டி கிளார்க் (6) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். டிரையான் (14), சுனே லுாஸ் (8), அன்னேரி டெர்க்சன் (10), சினாலோ ஜப்தா (6) நிலைக்கவில்லை. தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 126 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
![]() |
![]() |