அடுத்த அதிரடி! ஹெஸ்பொல்லா புதிய தலைவரும் காலி: இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்
அடுத்த அதிரடி! ஹெஸ்பொல்லா புதிய தலைவரும் காலி: இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்
ADDED : அக் 06, 2024 12:32 AM

டெல் அவிவ்: இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா சமீபத்தில் கொல்லப்பட்ட நிலையில், நேற்று நடந்த மற்றொரு தாக்குதலில் அவரது வாரிசாகவும், அந்த அமைப்பின் அடுத்த தலைவராகவும் கருதப்பட்ட ஹசீம் சபீ அதீனும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலின் காசா முனையில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த ஆண்டு அக். 7ல் இஸ்ரேலில் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி தந்தது. கடந்த ஓராண்டாக இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஹமாசுக்கு ஆதரவாக களமிறங்கிய லெபனானின் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த, பதிலுக்கு அவர்கள் மீதான வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
லெபனானின் பெய்ரூட்டில், கடந்த 28ம் தேதி ஹெஸ்பொல்லா அமைப்பினரின் தலைமையிடத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிகரித்துள்ள இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் ஹெஸ்பொல்லா அமைப்பின் மூத்த தலைவர்கள், படை தளபதிகள் உட்பட 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நேற்று அதிகாலை மீண்டும் குண்டு மழை பொழிந்தது. அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தின் பாதாள அறையில் அமைக்கப்பட்டிருந்த ஹெஸ்பொல்லாவின் உளவுப் பிரிவை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பதுங்கு குழிகளை அழிக்கும் குண்டுகள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டன. இதில், ஹசன் நஸ்ருல்லாவின் வாரிசாக கருதப்பட்ட ஹசீம் சபீ அதீன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நஸ்ரல்லா இறந்ததை அடுத்து, ஹெஸ்பொல்லா அமைப்பின் புதிய தலைவராக ஹசீம் சபீ அதீனும் அறிவிக்கப்பட்டார்.
அவர் கொல்லப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை ஹெஸ்பொல்லா அமைப்பினர் இதுவரை வெளியிடவில்லை. ஆனால், ஹசீம் சபீ அதீன் செயல்பாடுகள் எதுவும் இல்லாததால், அவர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த தாக்குதலில், ஹசீம் சபீ அதீனுடன், போர் தொடர்பாக ஆலோசனை நடத்திய ஈரானிய படைத் தளபதி இஸ்மாயில் கானி காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நஸ்ரல்லாவைத் தொடர்ந்து சபீ அதீனும் கொல்லப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வரும் இஸ்ரேல் வீரர்கள், 'ஹெஸ்பொல்லா அமைப்பில் தலைவர்களுக்கான தற்போதைய ஆயுட்காலம் மிகவும் சொற்பானது' என கேலி செய்து வருகின்றனர். அடுத்தடுத்து ஹெஸ்பொல்லா தலைவர்கள் மற்றும் போர் தளபதிகள் கொல்லப்பட்டு வருவது, ஹெஸ்பொல்லா அமைப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

