போர் வேண்டாம்; ராஜதந்திரமே தீர்வு: ஜி20 மாநாட்டில் இந்தியா திட்டவட்டம்
போர் வேண்டாம்; ராஜதந்திரமே தீர்வு: ஜி20 மாநாட்டில் இந்தியா திட்டவட்டம்
ADDED : அக் 31, 2026 07:13 AM

வாஷிங்டன்: உலகப் பிரச்னைகளுக்கு ராணுவ மோதல்கள் ஒருபோதும் தீர்வாகாது எனவும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும், ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தலைமையில், இரண்டு நாள் ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்று உரையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சர்வதேச அளவிலான மோதல்கள், கடல்சார் பாதுகாப்பு குறித்து விரிவாகப் பேசினார்.
போரால் தீர்வு கிடைக்காது:
ரஷ்யா - உக்ரைன் மோதல், மேற்கு ஆசியப் பதற்றங்கள் உள்ளிட்ட சூழல்களைச் சுட்டிக்காட்டிய அவர், உலகளாவிய சவால்களை ராணுவ பலத்தால் தீர்க்க முடியாது என்றும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர அணுகுமுறையால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
கடல்சார் பாதுகாப்பும் வணிகமும்:
மேலும் அவர் பேசியதாவது: சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி, கப்பல் போக்குவரத்துக்கான சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். வணிகக் கப்பல்கள், மாலுமிகள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மேற்கு ஆசியப் பதற்றத்தால் இதுவரை 14 மாலுமிகள் உட்பட 22 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இத்தகைய தாக்குதல்களால் உணவு, எரிபொருள் மற்றும் உரங்களின் விலை உயர்ந்து, வளரும் நாடுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.
மார்க்கெட்டுகளை சீர்குலைப்பது, உள்நாட்டு உற்பத்தியைப் பாதிக்கும் வகையில் சரக்குகளை கையாள்வது மற்றும் வினியோகச் சங்கிலியை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவது முற்றிலும் கைவிடப்பட வேண்டும். வலுவான வர்த்தக இணைப்புகளையும், மாற்று வர்த்தகத்தையும் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
பயங்கரவாதத்திற்குச் சவுக்கடி:
குறுகிய கால லாபக் கணக்குகளுக்காக பயங்கரவாதத்தின் ஆபத்துகளை யாரும் ஒதுக்கித் தள்ளிவிடக் கூடாது. பயங்கரவாதத்தை ஆதரிப்பது ஆபத்தான விளையாட்டு; அது கடைசியில் அதைத் தூண்டிவிட்டவர்களையே தாக்கும். இவ்வாறு அவர் எச்சரித்தார்.
