குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லை: லண்டன்வாசிகள் புலம்பல்
குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லை: லண்டன்வாசிகள் புலம்பல்
ADDED : பிப் 12, 2025 09:48 PM

லண்டன்: லண்டனில் குடிநீர் விநியோகம் செய்யும் பைப்களில் உடைப்பு ஏற்பட்டதால், ஆயிரக்கணக்கானோர் குடிக்கவும், குளிக்கவும், கழிப்பறைகளில் பயன்படுத்தவும் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
லண்டனில் ஓடும் தேம்ஸ் நதியில் இருந்து, தண்ணீர் எடுத்து பொது மக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனை ' தேம்ஸ் வாட்டர் ' என்ற நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.
இந்நிலையில், லண்டனில் தெற்கு பகுதியில்  குடிநீர் பைப்களில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. இதனால் கிறிஸ்டல் அரண்மனை, சிந்தென்ஹம் மற்றும் அதனைச்சுற்றிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, உடைப்பு ஏற்பட்டதை சரி செய்யும் பணியில் பொறியாளர்களை 'தேம்ஸ் வாட்டர்' நிறுவனம் ஈடுபடுத்தி உள்ளது.  பொறியாளர்கள் இரவு பகலாக உழைத்து வரும் நிலையில்,  கிறிஸ்டல் பேலஸ் பகுதியில் மற்றொரு இடத்தில் பைப்களில் நீர்கசிவு ஏற்பட்டுஉள்ளது. இது நிலையை இன்னும் சிக்கலாக்கி உள்ளது.
இதனையடுத்து தாங்கள் குடிக்கவும், குளிக்கவும்,  கழிவறைகளில் பயன்படுத்தவும் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகிறோம் என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். அதேபோல், தண்ணீர் பிரச்னையால், தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என வணிகர்களும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து மன்னிப்பு கோரியுள்ள 'தேம்ஸ் வாட்டர்' நிறுவனம், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம்  தண்ணீர் அனுப்பி உள்ளது.   மேலும் உடல்நல பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

