தேர்தல் புறக்கணிப்பா? ஆலோசிப்போம் என்கிறார் தேஜஸ்வி
தேர்தல் புறக்கணிப்பா? ஆலோசிப்போம் என்கிறார் தேஜஸ்வி
ADDED : ஜூலை 23, 2025 10:16 PM

புதுடில்லி: '' பீஹார் சட்டசபை தேர்தல் புறக்கணிப்பது என்ற யோசனை ஒரு திட்டம் தான். அது குறித்து ஆலோசனை நடத்துவோம். கூட்டணி கட்சிகள் மற்றும் மக்களின் கருத்து கேட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்'', என ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் தேஜஸ்வி கூறியுள்ளார்.
பீஹாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. போலி வாக்காளர்களை தடுக்கும் வகையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதற்கு காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் வாயிலாக பீஹாரில் 52 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கி உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தேர்தல் கமிஷனின் நடவடிக்கை பார்லிமென்டிலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சியினர் அமளி காரணமாக பார்லிமென்ட் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பீஹார் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி கட்சி தலைவருமான தேஜஸ்வி கூறியதாவது; போலி வாக்காளர் பட்டியலை பயன்படுத்தி தேர்தலை சந்திக்க பா.ஜ., விரும்பினால், அவர்களுக்கு பதவி நீட்டிப்பை வழங்கலாம். ஒட்டுமொத்த நடவடிக்கையும் நேர்மையற்ற முறையில் இருக்கும்போது தேர்தலை நடத்துவதில் என்ன பயன்?
தேர்தலை புறக்கணிப்பது என்பது ஒரு வாய்ப்பு. அது குறித்து யோசிப்போம். இதில் இறுதி முடிவு எடுக்கும் முன்னர் பொது மக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளிடம் கருத்து கேட்போம். இவ்வாறு அவர் கூறினார்.