தென் கொரியாவில் அவசரநிலை அறிவிப்பு பார்லிமென்டில் தோற்கடித்தது எதிர்க்கட்சி
தென் கொரியாவில் அவசரநிலை அறிவிப்பு பார்லிமென்டில் தோற்கடித்தது எதிர்க்கட்சி
ADDED : டிச 03, 2024 11:47 PM

சியோல், கிழக்காசிய நாடான தென் கொரியாவில், அடுத்தாண்டு தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை மசோதா குறித்து ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. எதிர்க்கட்சிக்கு, ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் சிலரும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் தொலைக்காட்சி வழியே நாட்டு மக்களிடையே நேற்று பேசியதாவது:
தாராளவாத கொள்கைகளை பின்பற்றும் தென் கொரியாவை, வட கொரியாவின் கம்யூனிச சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கவும், தேச விரோத சக்திகளை ஒழிக்கவும் அவசரநிலை ராணுவ சட்டம் பிரகடனப்படுத்தப்படுகிறது.
ஆட்சி முடக்கம்
மக்களின் வாழ்வாதாரத்தைப் பொருட்படுத்தாமல், குற்றச்சாட்டுகளில் இருந்தும், சிறப்பு விசாரணையில் இருந்தும், சட்டத்தின் பிடியில் இருந்தும் தங்கள் தலைவரை காப்பாற்றுவதற்காக மட்டுமே ஆட்சியை எதிர்க்கட்சிமுடக்கியுள்ளது.
நம் பார்லிமென்ட், குற்றவாளிகளின் புகலிடமாகவும், சட்டமியற்றும் சர்வாதிகாரத்தின் குகையாகவும் மாறியுள்ளது.
இது நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்புகளை முடக்கி, நம் தாராளவாத ஜனநாயக ஒழுங்கை கவிழ்க்க முயற்சிக்கிறது.
போதைப்பொருள் குற்றங்களை எதிர்த்து போராடுதல், பொது பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கு தேவையான நிதியை குறைத்து, நாட்டை போதைப்பொருள் புகலிடமாகவும், நாட்டில் குழப்பமான நிலையை உருவாக்கவும் எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர்.
கூடிய விரைவில் தேச விரோத சக்திகளை ஒழித்து நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பதற்றமான சூழல்
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், அதிபரின் பிரகடனத்தை ரத்து செய்யும் தீர்மானம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதாக, சபாநாயகர் வூ வான் ஷிக் அறிவித்தார்.
''ஜனநாயகத்தையும், மக்களையும் காப்பாற்றும் பொறுப்பு பார்லிமென்டிற்கு உள்ளது. பார்லிமென்டிலிருந்து ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும்,'' என, அறிவித்தார்.
இதனால் தென் கொரியாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.