'விறுவிறு' கட்டத்தில் ஓவல் டெஸ்ட்; இந்திய பவுலர்கள் அசத்தினால் வெற்றி
'விறுவிறு' கட்டத்தில் ஓவல் டெஸ்ட்; இந்திய பவுலர்கள் அசத்தினால் வெற்றி
ADDED : ஆக 04, 2025 06:26 AM

லண்டன்: ஓவல் டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்தின் ஹாரி புரூக், ஜோ ரூட் சதம் விளாசினர்.
இங்கிலாந்து சென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆண்டர்சன் - சச்சின் டிராபி) பங்கேற்கிறது. நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கி உள்ளது. ஐந்தாவது டெஸ்ட் லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 224, இங்கிலாந்து 247 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 396 எடுத்தது. இங்கிலாந்துக்கு 374 ரன்னை இலக்காக நிர்ணயித்தது. மூன்றாவது நாள் முடிவில் இங்கிலாந்து 50/1 ரன் எடுத்து, 324 ரன் பின்தங்கியிருந்தது.
டக்கெட் 'அவுட்'
நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. சிராஜ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய டக்கெட் அரைசதம் கடந்தார். இந்த நேரத்தில் பிரசித் கிருஷ்ணா திருப்பம் ஏற்படுத்தினார். இவரது பந்தில் டக்கெட் (54) அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் போப், அதிவேகமாக ரன் சேர்த்தார். கிருஷ்ணா ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். சிராஜ் 'வேகத்தில்' போப் (27) எல்.பி.டபிள்யு., ஆனார். இதற்கு 'ரிவியு' கேட்டும் பலன் கிடைக்கவில்லை. இங்கிலாந்து 106/3 ரன் எடுத்து தவித்தது.
'பாஸ் பால்' ஸ்டைல்
பின் அனுபவ ஜோ ரூட், ஹாரி புரூக் சேர்ந்து இந்திய பந்துவீச்சை சிதறடித்தனர். 'பாஸ் பால்' பாணியில் புரூக் அதிரடியாக ஆடினார். ஆகாஷ் தீப் ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். பிரசித் கிருஷ்ணா ஓவரில் 16 ரன் விளாசினார். அபாரமாக ஆடிய புரூக், டெஸ்டில் தனது 10வது சதம் அடித்தார். இத்தொடரில் இவரது இரண்டாவது சதம். ஆகாஷ்தீப் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார் புரூக். அடுத்த பந்தையும் துாக்கி அடித்தார். இம்முறை சிராஜ் கச்சிதமாக பிடிக்க, புரூக் (111, 14x2, 2x6) அவுட்டானார்.
ஆகாஷ் தீப் பந்தில் 2 ரன் எடுத்த ரூட், டெஸ்ட் அரங்கில் 39வது சதம் எட்டினார். பெத்தல் (5) நிலைக்கவில்லை. சிறிது நேரத்தில் கிருஷ்ணா பந்தில் ரூட்(105, 12X4) அவுட்டாக 'டென்ஷன்' ஏற்பட்டது. தேநீர் இடைவேளைக்கு பின் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 339/6 ரன் எடுத்திருந்த போது, வெளிச்சமின்மை, மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஜேமி ஸ்மித் (2) அவுட்டாகாமல் இருந்தார்.
வோக்ஸ் காயமடைந்த நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 3 விக்கெட், இங்கிலாந்து வெற்றி பெற 35 ரன் தேவைப்படுகிறது. இன்று பவுலர்கள் அசத்தினால் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யலாம்.