sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இரவோடு இரவாக வங்கதேச பார்லிமென்ட் கலைப்பு

/

இரவோடு இரவாக வங்கதேச பார்லிமென்ட் கலைப்பு

இரவோடு இரவாக வங்கதேச பார்லிமென்ட் கலைப்பு

இரவோடு இரவாக வங்கதேச பார்லிமென்ட் கலைப்பு

8


UPDATED : ஆக 07, 2024 10:53 AM

ADDED : ஆக 07, 2024 12:10 AM

Google News

UPDATED : ஆக 07, 2024 10:53 AM ADDED : ஆக 07, 2024 12:10 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா: மாணவர் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து, வங்கதேச பார்லிமென்டை கலைப்பதாக அதிபர் முகமது ஷகாபுதீன் உத்தரவு பிறப்பித்தார். அதிகாரத்தை கைப்பற்றியுள்ள ராணுவ தளபதி, இடைக்கால அரசு அமைக்கும் முயற்சியை துவங்கியுள்ளார்.

தேர்தல் முறைகேடு, இட ஒதுக்கீடு ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய ஒரு மாத கால போராட்டத்தின் விளைவாக, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார். நாட்டை விட்டு வெளியேறிய அவர், தற்காலிகமாக இந்தியாவில் தங்கியுள்ளார். லண்டன் நகரில் தஞ்சமடைய பிரிட்டன் அரசிடம் விண்ணப்பித்து உள்ளதாக தெரிகிறது.

உத்தரவு


ஹசீனா வெளியேறியதும் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றிய தளபதி வகார் உஜ் ஜமான், இடைக்கால அரசு அமைப்பது குறித்து அதிபர் மற்றும் கடற்படை, விமானப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி பிரதிநிதியும் அதில் பங்கேற்றார்.ஹசீனா அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கைதானவர்களை விடுதலை செய்ய அக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவரான பேகம் கலீதா ஜியாவை விடுதலை செய்யுமாறு அதிபர் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார். அதையடுத்து பார்லிமென்ட் கலைப்பு உத்தரவு அறிவிக்கப்பட்டது.

கடந்த ஜனவரியில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், தொடர்ந்து நான்காவது முறையாக ஹசீனா பிரதமரானார். தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக பல்வேறு சர்வதேச அமைப்புகள் கூறின. பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் மாணவர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்த பிறகும் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.ஹிந்துக்களும் இந்தியர்களும் தாக்கப்பட்டனர். கடைகள், கோவில்கள் சூறையாடப்பட்டன. கலவர சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு போராட்டக் குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.

நிபந்தனை


இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாகவும் அவர்கள் பல நிபந்தனைகள் விதித்துள்ளனர். 'இடைக்கால அரசில் ராணுவத்தினர் இடம்பெற கூடாது; எந்த கட்சியின் பிரதிநிதியும் இருக்கக் கூடாது; அரசியல் மற்றும் ராணுவத்தை சாராத பொதுமக்கள் பிரதிநிதிகள் மட்டுமே அரசில் பொறுப்பேற்க வேண்டும்; கடந்த 2006ல் நோபல் பரிசு வென்ற பேராசிரியர் முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பங்கேற்க வேண்டும்' ஆகியவை முக்கிய நிபந்தனைகள். இடைக்கால அரசின் பிரதான பொறுப்பு, பார்லிமென்ட் தேர்தலை சுதந்திரமாக நியாயமாக நடத்தி முடிப்பது மட்டுமே என மாணவர்கள் கூறுகின்றனர். தங்கள் நிபந்தனைகளை ராணுவ தளபதி ஏற்காவிட்டால், மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று மாணவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் நஹித் இஸ்லாம் தெரிவித்தார்.

சிறு கடன் தொடர்பாக ஆய்வு செய்து, கிராமீன் வங்கியை துவக்கி, பெண்களுக்கும் விவசாயிகளுக்கும் பொருளாதார பாதுகாப்பு ஏற்படுத்தியதற்காக நோபல் பரிசு வென்றவர் முகமது யூனுஸ்.

கோரிக்கை


பிரதமர் ஹசீனாவை விமர்சித்ததால், யூனுஸ் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. அவர் நாட்டை விட்டு வெளியேறி பிரான்சில் வசித்து வருகிறார். அரசியலில் ஈடுபடும் எண்ணமே இல்லை என்றாலும், நாட்டின் நலன் கருதி மாணவர்களின் கோரிக்கையை ஏற்பதாக அவர் கூறியுள்ளார். யூனுஸ் தவிர பிரபல எழுத்தாளர் சலிமுல்லா கான், டாக்கா பல்கலையின் முன்னாள் பேராசிரியர் நஸ்ருல் இஸ்லாம் ஆகியோரும் இடைக்கால அரசில் இடம் பெறலாம் என கூறப்படுகிறது.

அரசியல் சார்புடைய எவரும் இடம் பெறக்கூடாது என மாணவர்கள் நிபந்தனை விதித்த போதிலும், கலீதா ஜியா கட்சியின் முக்கிய தலைவருடன், அதிபர் ஆலோசனை நடத்தியுள்ளார். ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தாலும், வங்கதேசத்தின் அரசியல் அல்லாத பிரச்னைகள் எதுவும் இப்போதைக்கு தீராது; இந்த நிச்சயமற்ற சூழலை ராணுவம் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனது இருப்பை பலப்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தான் அளவுக்கு இல்லை என்றாலும், வங்கதேசத்திலும் அரசியல் நிர்வாகம் மீது ஆதிக்கம் செலுத்த, ராணுவம் தொடர்ந்து முயன்று வந்துள்ளது. அந்நாடு உருவாகி 53 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 29 முறை, ஆட்சியை கவிழ்க்க ராணுவம் முயன்றுள்ளது. அதில் பல முறை வெற்றியும் பெற்றுள்ளது. முதல் வெற்றி 1975ல். அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மானையும் அவரது குடும்பத்தினர் 18 பேரையும், சுட்டுக் கொன்றது ராணுவம். அதிலிருந்து 16 ஆண்டுகள் ராணுவமே ஆட்சி செய்தது. முஜிபுரின் மகள் தான் ஹசீனா.

யார் இந்த நஹித் இஸ்லாம்?


வங்கதேசத்தில், ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர், நஹித் இஸ்லாம். டாக்கா பல்கலையில் சமூகவியல் துறையின் மாணவரான இவர், மனித உரிமைகளுக்காகவும் போராடி வருகிறார். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய, 'பாகுபாட்டிற்கு எதிரான மாணவர்கள்' அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக, நஹித் இஸ்லாம் உள்ளார். இவர், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கடந்த ஜூலையில் மர்ம நபர்களால் இருமுறை நஹித் இஸ்லாம் கடத்தப்பட்டார்.

'எல்லை பகுதிக்கு செல்ல வேண்டாம்'


வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அதை ஒட்டியுள்ள நம் எல்லை பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என உள்ளூர் மக்களுக்கு பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறிப்பாக, இரவு நேரங்களில் செல்வதை தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தை ஒட்டியுள்ள வங்கதேச எல்லை பகுதியில் உள்ள கள நிலவரங்களையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் எல்லை பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரல் தல்ஜித் சிங் சவுத்ரி நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, அங்குள்ள அதிகாரிகளிடம், வங்கதேச எல்லை வழியாக ஊடுருவல்காரர்கள் உள்ளே வருவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தும்படியும் உத்தரவிட்டார்.நம் நாட்டின் மேற்கு வங்கம், திரிபுரா, மேகாலயா, அசாம், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்கள் வங்கதேச எல்லையில் உள்ளன. இதையடுத்து, வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக யாரும் ஊடுருவாமல் தடுக்கும் வகையில் இந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

'என் தாய் அடைக்கலம் கேட்கவில்லை'


அமெரிக்காவில் வசிக்கும், ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வஜேத் ஜாய் கூறியதாவது: வங்கதேசத்தை விட்டு வெளியேற என் தாயார் ஷேக் ஹசீனா ஒருபோதும் விரும்பவில்லை. நிலைமை மிகவும் மோசமானதை அடுத்து, அவரது பாதுகாப்பு கருதி, நாட்டை விட்டு வெளியேறும்படி நாங்கள் தான் வலியுறுத்தினோம்.கனத்த இதயத்துடனேயே, அவர் வெளியேறினார்.மாணவர்கள் போராட்டத்தால் பெரிய அளவில் படுகொலைகள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே பதவியை ராஜினாமா செய்தார். எந்த நாட்டிடமும் அவர் அடைக்கலம் கேட்கவில்லை. இதுகுறித்து வதந்தி பரப்பப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

ஹோட்டலுக்கு தீ: 24 பேர் பலி


வங்கதேசத்தின் ஜெஸ்சோர் மாவட்டத்தில், அவாமி லீக் கட்சி நிர்வாகி ஷாஹின் சக்லதாருக்குச் சொந்தமான, ஜாபிர் இன்டர்நேஷனல் ஹோட்டலுக்கு, நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.இந்த தீ மற்ற தளங்களுக்கும் மளமளவென பரவியது. இந்த விபத்தில், இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 24 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.

ஹசீனா தப்புவதற்கு முன்...


வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்புவதற்கு முன், அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, ஊரடங்கு உத்தரவை கடுமையாக அமல்படுத்தும்படி அவர் கேட்டுக்கொண்டார். இருப்பினும், நிலைமை மோசமடைந்ததை சுட்டிக் காட்டிய அதிகாரிகள், ஹசீனாவை பதவி விலகும்படி வலியுறுத்தினர். இதற்கிடையே, அமெரிக்காவில் வசித்து வந்த ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வஜேத் ஜாய் இதில் தலையிட்டார். பாதுகாப்பு கருதி, ஹசீனா மற்றும் அவரின் சகோதரி ரெஹானா ஆகியோரை தப்பிச் செல்ல வலியுறுத்தினார். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் போராட்டக்காரர்களால் தாக்கப்படலாம் என உளவுத் துறை எச்சரித்ததை அடுத்து, பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பினார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்


“வங்கதேசத்தில் கலவரக்காரர்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் சிறுபான்மையினரை காக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என மத்திய அரசுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த அலோக் குமார் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “வங்கதேசத்தில் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, அங்கு அரங்கேறி வரும் மனித உரிமை மீறல்களை தடுக்க, சர்வதேச நாடுகளுடன் ஒன்றிணைந்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். “இந்த சூழலில், நம் நாட்டு எல்லைக்குள் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல்காரர்கள் உள்ளே நுழைவதை தடுக்க தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார். ஹிந்துக்கள் மீதான தாக்குதலுக்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹிந்துக்கள் மீது தாக்குதல்


வங்கதேச கலவரத்தின்போது ஹிந்துக்களை குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதுடன், பல கோவில்களையும் சேதப்படுத்தினர். இதுதவிர அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த இரண்டு ஹிந்து மத தலைவர்களையும் வன்முறையாளர்கள் கொன்றுள்ளனர்.

இதுகுறித்து வங்கதேச ஹிந்து, புத்த, கிறிஸ்துவ மத நல்லிணக்க கவுன்சில் தலைவர் கஜோல் தேவநாத் கூறுகையில், “வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையின மக்கள், கடும் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். பெண்கள், குழந்தைகள் என பாரபட்சமின்றி அனைவரின் மீது தாக்குதல்களை வன்முறையாளர்கள் அரங்கேற்றி வருகின்றனர். குறிப்பாக, ஹிந்துகளை குறிவைத்து இந்த தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படுகின்றன. சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க ராணுவத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

பஸ் சேவை ரத்து


மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்தின் டாக்காவுக்கு நேற்று, 50க்கும் மேற்பட்ட பயணியருடன் பஸ் சென்றது. இதில், வங்கதேசத்தைச் சேர்ந்த 45 பேர் இருந்தனர்.இந்தியா - வங்கதேச எல்லையான பெட்ராபோல் என்ற பகுதியில் பஸ் வந்த போது தடுத்து நிறுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து வங்கதேச பயணியர் உட்பட அனைவரும் பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்டனர்.

திருப்பி அனுப்ப கோரிக்கை


வங்கதேச வழக்கறிஞர்கள் சட்ட தலைவர் மஹ்பூப் உத்தீன் கோகோன் கூறியதாவது: இந்திய மக்களுடன் நாங்கள் நல்ல உறவைப் பேண விரும்புகிறோம். தயவுசெய்து எங்கள் நாட்டை விட்டு ஓடிய பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஷேக் ரெஹானாவை கைது செய்து வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்புங்கள். ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் பலரை கொன்றுள்ளார். மாணவர்கள் உட்பட போராட்டக்காரர்கள் அவசர நிலையை விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அமித் ஷா - ஜெய்சங்கர் ஆலோசனை


வங்கதேசத்தில் நிலைமை தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.அப்போது, வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும், நம் நாட்டில் உள்ள வங்க தேசத்தை ஒட்டிய மாநிலங்களின் நிலைமை குறித்தும் விவாதித்தனர்.

வங்கதேச கலவரம்அமெரிக்கா கருத்து


வங்கதேச கலவரம் குறித்து, அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியதாவது: வங்கதேச நிலவரத்தை அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருகிறது. அங்கு இடைக்கால அரசு தொடர்பான அனைத்து முடிவுகளும் ஜனநாயக விதிமுறைகள் மற்றும் வங்கதேச மக்களின் விருப்பத்திற்கேற்ப நடக்க வேண்டும். வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம். இந்த நேரத்தில் வங்கதேச மக்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அன்றே கணித்த ஹசீனா


கடந்த மே மாதத்தில், பேட்டி ஒன்றில் ஷேக் ஹசீனா கூறியதாவது:ஒரு நாட்டின் விமானப்படை தளத்தை, வங்கதேசத்தில் அமைக்க அனுமதி அளிக்கும்படி, 'வெள்ளை மனிதர்' ஒருவரிடம் இருந்து எனக்கு கோரிக்கை வந்தது.அந்த நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை தெரிவிக்க முடியாது. இதற்கு அனுமதி அளித்திருந்தால் எனக்கு எந்த பிரச்னையும் வந்திருக்காது.என் அரசை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்படுகிறது. என் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டது போல நானும் படுகொலை செய்யப்படலாம். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.






      Dinamalar
      Follow us