சிந்து நதி பூர்வீக சொத்து உரிமை கொண்டாடும் பாக்.,; இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு
சிந்து நதி பூர்வீக சொத்து உரிமை கொண்டாடும் பாக்.,; இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு
UPDATED : மே 03, 2025 07:31 AM
ADDED : மே 03, 2025 06:15 AM

சிந்து நதி ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக நிறுத்தியதற்காக, இந்தியாவுக்கு துாதரக ரீதியில் முறையான நோட்டீஸ் அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
ஏப்., 22ல் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இந்தியா- - பாக்., இடையே, 1960ல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. 65 ஆண்டுகளுக்கு பின், இந்தியா இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
ஒப்பந்தத்தின் விதிகளின்படி, சிந்து மற்றும் கிளை நதிகளில் இருந்து இந்தியாவுக்கு 20 சதவீத நீர், பாகிஸ்தானுக்கு 80 சதவீத நீர் கிடைக்கிறது. இந்த தண்ணீரையே பாகிஸ்தான் முழுக்க, முழுக்க விவசாயம் மற்றும் நீர்மின் திட்ட தேவைகளுக்கு பயன்படுத்துகிறது.
இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்த நடவடிக்கை ஒருதலைப்பட்சமானது என பாகிஸ்தான் கொக்கரித்தது. இது தொடர்பாக, இந்தியாவுக்கு, துாதகரக ரீதியிலான முறையான நோட்டீஸ் அனுப்ப பாக்., திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு, சட்டம் மற்றும் நீர்வள அமைச்சகங்களுக்கு இடையிலான ஆலோசனைக்குப் பின், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செய்தித்தாள், காட்சி ஊடக ஆதாரங்களை மேற்கோள் காட்டி நோட்டீஸ் அனுப்ப உள்ளது. சிந்து நதி மீது எங்களுக்கு நீண்ட காலமாக உரிமை உள்ளது. இதை இந்தியாவால் நிறுத்த முடியாது என, பாக்., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்போது, மத்தியஸ்தம் வகித்த உலக வங்கிக்கும் பாகிஸ்தான் தரப்பில், முழு விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை பாக்., வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ மேற்கொண்டு வருகிறார்.