'பாகிஸ்தானுக்கு சரியான பாடம் கற்பிக்கப்பட்டது': காங்கிரஸ் எம்.பி., சசி தரூர்
'பாகிஸ்தானுக்கு சரியான பாடம் கற்பிக்கப்பட்டது': காங்கிரஸ் எம்.பி., சசி தரூர்
UPDATED : மே 26, 2025 06:29 AM
ADDED : மே 26, 2025 12:22 AM

வாஷிங்டன்: “பாகிஸ்தானில் இருந்தபடி, யார் வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் நுழைந்து மக்களை கொல்லலாம் என்ற எண்ணம் கொண்ட அந்நாட்டுக்கு, தகுந்த பாடம் கற்பிக்கப்பட்டு விட்டது,” என, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் அமெரிக்காவில் கூறினார்.
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலையை உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்துவதற்காக அனைத்து கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.,க்கள் அடங்கிய குழுவினர் பல்வேறு நாடுகளுக்கு சென்று, அங்குள்ள தலைவர்களுக்கு விளக்கி வருகின்றனர்.
காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான குழு கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நேற்று முன்தினம் அமெரிக்கா சென்ற அந்த குழுவின் தலைவரான சசி தரூர், அங்கு வசிக்கும் இந்தியர்களிடையே பேசியதாவது:
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தகுந்த பாடம் கற்பித்து விட்டோம். பாகிஸ்தானில் இருந்தபடி, யார் வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, தப்பிச் செல்லலாம் என்ற நிலைப்பாட்டுக்கு தக்க பதிலடி கொடுத்துஉள்ளோம்.
பயங்கரவாதிகள் துவக்கினர்; நாம் பதிலடி கொடுத்தோம். அவர்கள் நிறுத்தினர்; நாமும் நிறுத்தி விட்டோம். அதுதான், 88 மணி நேர போர். இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல், ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தி.மு.க., - எம்.பி., கனிமொழி தலைமையிலான அனைத்து கட்சி குழு, அந்நாட்டின் பார்லிமென்ட் உறுப்பினர்கள், அதிகாரிகள் குழுவை மே 23ல் சந்தித்து, இந்தியாவின் கருத்தை வலியுறுத்தியது.
அதற்கு மறுநாள், 24ம் தேதி, அந்நாட்டின் அறிஞர்கள் மற்றும் இரு நாடுகளின் உறவு குறித்த வல்லுநர்களை சந்தித்து, இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவித்தது.
இதையடுத்து, 'இந்திய குழுவின் ரஷ்ய சுற்றுப்பயணத்தால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் புதிய அத்தியாயம் ஏற்பட்டுள்ளது' என, மாஸ்கோவில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.