பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தான் ஆனால் ராணுவ தளபதி நாட்டாமை அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம்
பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தான் ஆனால் ராணுவ தளபதி நாட்டாமை அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம்
ADDED : செப் 28, 2025 03:18 AM

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். ஆனால், ராணுவத் தளபதி ஆசிம் முனீருக்கு அதிக அதிகாரம் உள்ளது என, அந்த நாட்டின் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் குறிப்பிட்டார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே நீண்டகாலமாக அதிகார போட்டி நடந்து வருகிறது.
அந்த நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தாலும், ராணுவத்தின் கையே எப்போதும் ஓங்கியிருக்கும். இதனால், அங்கு பல முறை ராணுவத் தளபதிகள் ஆட்சியாளர்களாக இருந்துள்ளனர்.
இந்த நிலை, தற்போதும் அங்கு நிலவி வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், சமீபத்தில் அளித்த பேட்டி விளங்குகிறது.
ஐ.நா., பொது சபை கூட்டம் உள்ளிட்டவற்றில் பங்கேற்க சென்றுள்ள கவாஜா ஆசிப், தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அமெரிக்காவில் நியமிக்கப்பட்ட ராணுவ அமைச்சருக்கு, ராணுவத் தளபதிகளை நீக்க அதிகாரம் உள்ளது. அதுபோல் பாகிஸ்தானில் உள்ளதா என்று கேட்கப்பட்டது. இதற்கு, ஆம் அல்லது இல்லை என்று அவர் சொல்லாமல், மழுப்பலான பதில் அளித்தார்.
ஏதாவது ஒரு விஷயத்தில் ராணுவத் தளபதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், முடிவுகள் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எட்டப்படும். இந்த ஏற்பாடு, நடைமுறை தேவை, என்று பதிலளித்தார்.
மேலும், ராணுவத்தின் ஆதிக்க உணர்வுக்கு கடந்த கால ராணுவ ஆட்சியாளர்கள் மீது குற்றஞ்சாட்டினார்.
இதன்படி, நாட்டில் ராணுவமே முக்கிய முடிவுகளை எடுக்கிறது என்பதை அவர் மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் என்பதையும், ஆசிம் முனீர் நாட்டின் உண்மையான ஆட்சியாளர் என்பதை பிரதிபலிப்பதாகவும் உள்ளது என, அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.