தென் கொரியாவில் பயணிகள் விமானம் தீப்பிடித்தது; 176 பேர் பத்திரமாக மீட்பு
தென் கொரியாவில் பயணிகள் விமானம் தீப்பிடித்தது; 176 பேர் பத்திரமாக மீட்பு
ADDED : ஜன 28, 2025 09:48 PM

சியோல்: தென் கொரியாவின் கிம்ஹே விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தீப்பிடித்தது. பயணிகள் 176 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தென் கொரியாவின் கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று ஹாங்காங்கிற்கு, 169 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்கள் என மொத்தம் 176 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட தயார் நிலையில் இருந்தது. ஆனால், புறப்படுவதற்கு சற்று நிமிடத்திற்கு முன்பு, விமானம் தீப்பிடித்தது.
இதையடுத்து விமானத்திலிருந்து 176 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தீ விபத்தில் மூன்று பேருக்கும் மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தீ பிடிப்பதற்கு சற்று முன், விமானி சுதாரித்துக் கொண்டார். இதனால் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கடந்த டிச., 29ம் தேதி பாங்காங்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என 181 பேரை ஏற்றிக் கொண்டு, தென்கொரியா புறப்பட்ட விமானம், முவான் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீ பற்றியதில், அதில் பயணித்த 179 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 விமானிகள் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இந்த விபத்துக்கு பறவை மோதியதே காரணம் என்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.