என்எப்எல் முன்னாள் ஆணையர் பால் டாக்லியாபு காலமானார்
என்எப்எல் முன்னாள் ஆணையர் பால் டாக்லியாபு காலமானார்
ADDED : நவ 10, 2025 10:32 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் மிகவும் பிரபலமான என்எப்எல் விளையாட்டு தொடரின் முன்னாள் ஆணையர் பால் டாக்லியாபு,84, காலமானார்.
உலகின் மிக உயர்ந்த தொழில்முறை விளையாட்டாக கருதப்படுவது அமெரிக்காவில் நடத்தப்படும் என்எப்எல் கால்பந்து தொடராகும். 1920ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்தத் தொடரின் ஆணையராக பால் டாக்லியாபு 1989ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவர், 2006ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 17 ஆண்டுகள் ஆணையராக இருந்து வந்தார்.
இந்த நிலையில், இதய செயலிழப்பு மற்றும் பார்கின்சன் நோய் காரணமாக பால் டாக்லியாபு நேற்று காலமானார். இவரது பதவி காலத்தில் தான், என்எப்எல் தொடரில் கேரொலினா பேன்தர்ஸ் (1995), ஜாக்சன்வில் ஜாகுவார்ஸ் (1995), கிளீவ்லாந்து பிரவுன்ஸ் (1999), ஹியூஸ்டன் டெக்சான்ஸ் (2000) ஆகிய அணிகளைச் சேர்த்து இந்த லீக்கை 32 அணிகள் கொண்டதாக விரிவுபடுத்தினார். அதிநவீன மைதானங்களின் உருவாக்கிய டாக்லியாபு, 2020 ம் ஆண்டில் ப்ரோ கால்பந்து ஹால் ஆப் பேமில் இடம்பிடித்தார்.
டாக்லியாபுவின் மறைவுக்கு தற்போதைய என்எப்எல் ஆணையர் ரோஜர் கூடல் இரங்கல் தெரிவித்துள்ளார். 'அவரது கொள்கை ரீதியான தலைமைப் பண்பும், தொலைநோக்குப் பார்வையும் என்எப்எல்லை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றது,' என்று புகழாரம் சூட்டினார்.

