தென் கொரியாவில் விமான விபத்து; 176 பேர் பரிதாப பலி!
தென் கொரியாவில் விமான விபத்து; 176 பேர் பரிதாப பலி!
UPDATED : டிச 30, 2024 10:17 AM
ADDED : டிச 29, 2024 06:54 AM

சியோல்: தென் கொரியாவில் நடந்த விமான விபத்தில் 176 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
பாங்காங்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என 181 பேரை ஏற்றிக் கொண்டு, இன்று (டிச.,29) விமானம் ஒன்று தென்கொரியா புறப்பட்டது. தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில், விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. விமான நிலையம் சியோலுக்கு தெற்கே 300 கிமீ தொலைவிலும், வடகொரிய எல்லையில் இருந்து 200 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீ பற்றியது. மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 176 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விமானம் ஓடுபாதையில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்தது தான் விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மன்னிச்சிருங்க...!
விமான விபத்திற்கு ஜெஜீ ஏர் விமானம் மன்னிப்பு கேட்டுள்ளது. 'துயரத்திற்கு வருந்துகிறோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களால் முடிந்த உதவிகளையும் செய்வோம்' என விமான நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.