போர் குறித்து உக்ரைன் அதிபருடன் பிரதமர் ஆலோசனை: ஜெய்சங்கர் தகவல்
போர் குறித்து உக்ரைன் அதிபருடன் பிரதமர் ஆலோசனை: ஜெய்சங்கர் தகவல்
ADDED : ஆக 23, 2024 06:10 PM

புதுடில்லி: '' உக்ரைனில் அமைதிக்கு பங்களிக்கும் புதுமையான தீர்வுகளை உருவாக்க அனைத்து நட்டு நாடுகளுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார் '', என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
உக்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது , விவசாயம், உணவு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன் பிறகு நிருபர்களை சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: பிரதமர் பயணம் வரலாற்று சிறப்பு மிக்கது. பிரதமர் மோடிக்கும், அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முக்கிய பகுதி இரு தரப்பு உறவுகளுக்காக அமைந்தது. கல்வி, விவசாயம், பாதுகாப்பு, பொருளாதார விவகாரங்கள், வர்த்தகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவை மீண்டும் கட்டமைக்க, குழு அமைக்க இருவரும் முடிவு செய்துள்ளனர்.
உக்ரைன் போர் குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர். அமைதிக்கு பங்களிக்கும் புதுமையான தீர்வுகளை உருவாக்க அனைத்து நட்பு நாட்டு தலைவர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். விரைவாக அமைதி ஏற்பட தேவையான பங்களிப்பை இந்தியா வழங்க தயாராக உள்ளது என்ற நிலைப்பாட்டை மோடி மீண்டும் உறுதி செய்தார்.மோதலின் விளைவுகள் குறித்து உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்.

