பெரும் எதிர்பார்ப்பில் பிரதமர் மோடி சுதந்திர தின உரை
பெரும் எதிர்பார்ப்பில் பிரதமர் மோடி சுதந்திர தின உரை
UPDATED : ஆக 15, 2025 06:18 AM
ADDED : ஆக 15, 2025 05:16 AM

புதுடில்லி: நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை யொட்டி இன்று டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
பெரும் எதிா்பாா்ப்பு
இன்று ( ஆக.15) 79-வது சுதந்திர தினவிழா நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இன்று காலை பிரதமர் மோடி டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார் பிரதமராக மோடி 12-வது முறையாக தேசிய கொடி ஏற்றி வைக்கிறார். மோடியின் சுதந்திர தின உரை பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரின் பல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே மாதம் பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை, இந்தியா-பாக்., ராணுவ மோதல் விவகாரத்தில் அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறிவரும் கருத்துகள், டிரம்ப்பின் வரிவிதிப்பு , வெளியுறவுக் கொள்கை, விண்வெளியில் சாதனை உள்ளிட்டவை பிரதமர் உரையில் முக்கியத்துவம் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வளா்ந்த இந்தியா என்ற இலக்கை தொடா்ந்து வலியுறுத்தி வரும் பிரதமா் மோடியின் இன்றைய சுதந்திர தின உரையில் இதுவும் இடம்பெறும்.
எதிா்க்கட்சிகளுக்கு பதிலடி?:
பீஹார் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தேர்தல் ஆணையம் மீதும் எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி, நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரை முடக்கி வருகின்றன. இதற்கும் பிரதமா் மோடி உரிய பதிலடி தருவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. சுதந்திர தின விழாவையொட்டி டில்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.