அரசியல் ஸ்டண்ட் அடிக்கும் டிரம்ப்: கமலா ஹாரிஸ் 'குட்டு'
அரசியல் ஸ்டண்ட் அடிக்கும் டிரம்ப்: கமலா ஹாரிஸ் 'குட்டு'
ADDED : செப் 01, 2024 01:57 PM

வாஷிங்டன்: 'டிரம்ப் புனித பூமியை அரசியல் ஆக்குகிறார். அவர் செயல் எல்லாமே ஒரு அரசியல் ஸ்டண்ட் தான்' என அதிபர் தேர்தலில் போட்டியிடும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடுமையாக சாடினார்.
போரில் உயிர் நீத்த வீரர்கள் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஆர்லிங்டன் தேசிய கல்லறைக்கு சென்ற அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு தேர்தல் பிரசாரமும் செய்தார். அவருடன் வந்த அவரது ஊழியர்கள், போட்டோ, வீடியோ எடுத்தனர். தேர்தல் பிரசாரம் செய்வதற்கு பயன்படுத்தும் நோக்கத்தில் இவ்வாறு செய்துள்ளனர். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கூறியதாவது: வீரர்கள் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம், புனித பூமி. அங்கு எந்த விதமான அரசியல் செயல்பாடுகளும் கூடாது என்று தடை உள்ளது. அப்படி இருந்தும் டிரம்ப் வேண்டும் என்றே அரசியல் செய்கிறார். ஸ்டண்ட் அடிப்பதற்காக அங்கு சென்றுள்ளார். இவர் தனது சுயநலத்திற்கு எதையும் செய்யக்கூடியவர்.
புனிதமான இடம்
அமெரிக்க வீரர்களை கவுரவிக்க நாங்கள் ஒன்று கூடும் ஒரு புனிதமான இடம், ஆர்லிங்டன் கல்லறை. அது அரசியலுக்கான இடம் அல்ல. மயானம் என்பது அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கான இடம் அல்ல. எங்கள் வீரர்கள், ராணுவ குடும்பங்கள் கவுரவிக்கப்பட வேண்டும். ஒருபோது இழிவுபடுத்தப்படக் கூடாது. இவ்வாறு கமலா கூறியுள்ளார்.