இந்திய பிரதமர் மீது மிகுந்த மரியாதை; டிரம்ப் உறுதி
இந்திய பிரதமர் மீது மிகுந்த மரியாதை; டிரம்ப் உறுதி
ADDED : பிப் 19, 2025 07:37 AM

வாஷிங்டன்: இந்தியா மற்றும் பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
இது குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில், டொனால்டு டிரம்ப் கூறியதாவது: சவூதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தைகளில், விரக்தியின் காரணமாக உக்ரைன் பங்கேற்கவில்லை. உக்ரைன் பேச்சுவார்த்தைகளில் முன்பே ஈடுபட்டிருக்க வேண்டும். இதை மிக எளிதாக தீர்த்து வைத்திருக்க முடியும்.
உக்ரைனில் ஐரோப்பா தனது படைகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அங்கு பாதுகாப்பு படைகளை பணியில் ஈடுபடுத்துவது நல்லது. நான் அதை எதிர்க்கவே மாட்டேன். முன்னாள் அதிபர் ஜோ பைடன் போரை கையாண்ட விதம் சரியில்லை.
ஒரு தீர்வை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் மோதலை நீடித்தார். போருக்கு என்னால் முற்றுப்புள்ளி வைக்க முடியும். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர எனக்கு அதிகாரம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்த மாத இறுதிக்குள் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு டிரம்ப் கூறினார்.
மலிவு விலையில் சிகிச்சை!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அவற்றில் ஒன்று நாடு முழுவதும் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை (IVF) மிகவும் மலிவு விலையில் கிடைப்பதை நோக்கமாகக் கொண்டது.
கருத்தரித்தல் சிகிச்சைகள் அரசினாலோ அல்லது காப்பீட்டு நிறுவனங்களினாலோ வழங்கப்படும். அதேபோல், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி முதல் கூடுதலாக 25% வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளது.
அதிக பணம் இருக்கிறது!
இந்தியாவில் ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டாலர்( இந்திய மதிப்பில் 182 கோடி ரூபாய்) நிதியை நிறுத்தி வைக்க, எலான் மஸ்க் தலைமையிலான டிஓஜிஇ குழு உத்தரவிட்டது.
இது குறித்து, டிரம்ப் கூறியதாவது: அவர்களிடம் அதிக பணம் இருக்கிறது. வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிக வரி விகிதங்களைக் கொண்ட இந்தியாவிற்கு அத்தகைய நிதி உதவி தேவையில்லை. நாங்கள் ஏன் இந்தியாவிற்கு 21 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குகிறோம்.
எங்களைப் பொறுத்தவரை அவர்கள் உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாகும். அவர்கள் அதிகமாக வரி விதிப்பதால் நாங்கள் அங்கு செல்ல முடியாது. இந்தியா மற்றும் அவர்களின் பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இவ்வாறு டிரம்ப் கூறினார்.

