ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 % வரி; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 % வரி; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
ADDED : ஜூலை 11, 2025 10:26 AM

வாஷிங்டன்: ''ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 2ம் தேதி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் மீதும் பரஸ்பர வரி விதித்த டிரம்ப், ஜூலை 9ம் தேதி வரை இந்த வரி விதிப்பை நிறுத்தி வைத்திருந்தார். சில தினங்களுக்கு முன் அவர், அனைத்து நாடுகளின் மீதான பரஸ்பர வரி விதிப்புக்கான கெடுவை ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.
இதற்கிடையே, வங்கதேசம், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் கையெழுத்திட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டன. இந்த வரி விதிப்பு அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பின்னர், பிரேசிலுக்கு 50 சதவீத வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.
பிரேசில், அல்ஜீரியா, புருனே, ஈராக், லிபியா, மால்டோவா, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை ஆகிய 8 நாடுகளுக்கு, புதிய வரி விதிப்பு குறித்து கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. வரும் ஆகஸ்ட் 1ம் தேதி புதிய வரி விதிப்பு நடைமுறைக்கு வருகிறது.
இந்நிலையில், ''ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதில் கனடா தோல்வி அடைந்துவிட்டது.
இதனால் கனடா பொருட்களுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 35 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்புகளை கனடா எற்றுக்கொள்ளாமல் வரி அதிகரிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தால் கடுமையான விளைவுகளை சந்திக்கும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.