'அதிபர் டிரம்புக்கு ஏதாவது ஆனால் அவரது பதவிக்கு வர தயார்'
'அதிபர் டிரம்புக்கு ஏதாவது ஆனால் அவரது பதவிக்கு வர தயார்'
ADDED : ஆக 30, 2025 05:47 AM

வாஷிங்டன் : 'அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடல்நிலை மோசமடைந்தால், அதிபர் பதவிக்கு தேவையான பயிற்சிகளை எடுத்து தயாராக உள்ளேன்' என துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், 79, உடல்நிலை குறித்து கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.
அவருக்கு அடிக்கடி கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால் நடையில் தடுமாற்றம் காணப்பட் டது. அதே போல் வலது கையில் கன்றிப்போன காயம் தோன்றியது. கடந்த 25ம் தேதி தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங்யை அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
அந்த சந்திப்பில், இந்த வலது கை காயம் தெளிவாக தெரிந்தது. இவை இதயம் அல்லது சிறுநீரக செயலிழப்புக்கு எடுக்கப்படும் சிகிச்சையால் தோன்றும் அறிகுறி என, சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இவற்றை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், 41, செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'ஏதேனும் மோசமான துயரம் ஏற்பட்டால், அதிபர் பதவிக்கான பணிகளுக்கு பயிற்சி பெற்று தயாராக உள்ளேன்' என தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில் மேலும் அவர் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து நான் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன். மீதமுள்ள பதவிக்காலத்தை பூர்த்தி செய்யும் வகையிலும், அமெரிக்க மக்களுக்கு சிறப்பான விஷயங்களை செய்யும் அளவுக்கும் அவர் நல்ல உடல் நலனுடன் உள்ளார்.
அதிபர் பொறுப்பு ஏற்கும் தேவை ஏற்பட்டால், துணை அதிபராக கடந்த 200 நாட்கள் நான் மேற்கொண்ட பணி, அதற்கு என்னை தயார்படுத்தி உள்ளது என்பேன். பெரும் துயரம் ஏற்பட்டால், நான் பெற்ற இந்த பயிற்சி உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.