காசா மீது இஸ்ரேல் தாக்குதல் வங்கதேசத்தில் எதிர்ப்பு பேரணி
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் வங்கதேசத்தில் எதிர்ப்பு பேரணி
ADDED : ஏப் 13, 2025 04:24 AM

டாக்கா : காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து வங்கதேசத்தில் நடந்த எதிர்ப்பு பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
மேற்காசியாவைச் சேர்ந்தை பாலஸ்தீன ஆதரவாளர்களான ஹமாஸ் பயங்கரவாதிகள், 2023ம் ஆண்டு இஸ்ரேலில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த 200க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதற்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பினருக்கும் இடையே ஓராண்டுக்கு மேலாக நீடிக்கும் சண்டையை நிறுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையில், 42 நாட்களுக்கு முதற்கட்ட போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சு தோல்வியில் முடிந்ததை அடுத்து, காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து, வங்கதேசத்தில் நேற்று பிரமாண்ட பேரணி நடந்தது.
டாக்கா பல்கலை அமைந்துள்ள சுஹ்ரவர்டி பகுதியில் நடந்த பேரணியில் வங்கதேச தேசியவாத கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன. மாணவர்கள், பொதுமக்கள் உட்பட ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பேரணியில் கலந்து கொண்டனர்.
பேரணியின் போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்டோருக்க எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

