ADDED : டிச 07, 2024 05:10 AM

லண்டன்: பிரிட்டனில் ரயில் போக்குவரத்தை, தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பிரதான வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து திடீரென முடங்கியது.
மத்திய லண்டன் பகுதியில் இருந்து ஹீத்ரூ விமான நிலையம், கேட்விக் எக்ஸ்பிரஸ், தேம்ஸ் லிங்க், தெற்கு, வடக்கு எலிசபெத் லைன் உட்பட ஒன்பது வழித்தடங்களில் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர்.
ரயில் இன்ஜின் டிரைவருக்கும், சிக்னல் ஆப்பரேட்டர்களுக்கும் இடையே முறையான தகவல் தொடர்பு இல்லாததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு ரயில்வே துறை அறிவித்தது. இதன் காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.தொழில்நுட்பக் கோளாறை நீண்டநேர போராட்டத்துக்கு பின் ரயில்வே ஊழியர்கள் சரிசெய்தனர். பிரிட்டன் ரயில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் ரேடியோ சிக்னல்களில் கோளாறு ஏற்பட்டதால், இன்ஜின் டிரைவர்கள் ரயிலை இயக்க முடியாமல் தவித்தனர். இதனால், பயணியருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு பிரிட்டன் ரயில் நிர்வாகம் வருத்தம் தெரிவித்தது.