ADDED : ஆக 07, 2025 12:13 AM
கொழும்பு,:இலங்கையில் அரசியல் ரீதியில் மிகவும் வலுவான ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், முதல் முறையாக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நம் அண்டை நாடான இலங்கையில், ராஜபக்சே குடும்பத்தினர், பல ஆண்டுகளாக அரசியல் ரீதியில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளனர். மகிந்த ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சே, அதிபர்களாக இருந்துள்ளனர்.
இவர்களுடைய மூத்த சகோதரர் சமல் ராஜபக்சே. இவர் பார்லிமென்ட் சபாநாயகராக, 2010 முதல் 2015 வரை இருந்துள்ளார். இவருடைய மகன் சசீந்திர ராஜபக்சே, இணை அமைச்சராக கடந்தாண்டு செப்., வரை பதவியில் இருந்துள்ளார். அதற்கு முன், தென் கிழக்கு பிராந்தியத்தின் முதல்வராகவும் இருந்துள்ளார்.
இவர் மீது அரசு நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்தது, அனுமதியில்லாமல் கட்டடங்கள் கட்டியது என, வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், ஊழல் வழக்கில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
இலங்கையில், தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தபின், ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன், சில அமைச்சர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.