சிரியா தலைநகரை கைப்பற்றியது கிளர்ச்சி படை; அதிபர் ஆசாத் தப்பியோட்டம்
சிரியா தலைநகரை கைப்பற்றியது கிளர்ச்சி படை; அதிபர் ஆசாத் தப்பியோட்டம்
ADDED : டிச 09, 2024 03:23 AM

டமாஸ்கஸ் : எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை, கிளர்ச்சி படைகள் நேற்று கைப்பற்றின. அதற்கு முன் அந்த நாட்டின் அதிபர் பஷார் அல் ஆசாத், 59, தப்பியோடினார்.
கடந்த 54 ஆண்டுகளாக இருந்த ஆசாத் குடும்பத்தினரின் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்காசிய நாடான சிரியாவில், 2000ம் ஆண்டில் இருந்து அதிபராக இருந்தவர் பஷார் அல் ஆசாத். அதற்கு முன், 30 ஆண்டுகளாக அவருடைய தந்தை ஹபீஸ் அல் ஆசாத் அதிபராக இருந்தார்.
அவரது மறைவைத் தொடர்ந்து பதவியேற்ற ஆசாத், தந்தை வழியில் எதிர்ப்பாளர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கினார். அவர் பதவியேற்றபோது, நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால்,
தொடர்ச்சி 16ம் பக்கம்
ஆட்சி அதிகாரத்துக்காக, தன்னை எதிர்ப்போரை கட்டுப்படுத்தி, முழு அதிகாரத்தையும் தன் கைக்குள் வைத்திருந்தார்.
கடந்த, 2011ல் அரசுக்கு எதிராக துவங்கிய போராட்டம், உள்நாட்டு போராக வெடித்தது. அரசுக்கு எதிராக பல அமைப்புகள், பயங்கரவாத அமைப்புகள் இணைந்தன.
கடந்த, 14 ஆண்டுகளில் ஆசாத் நிர்வாகத்தின் கடுமையான நடவடிக்கைகளால் உள்நாட்டு போரில் ஐந்து லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம், 2.3 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில், பாதிக்கும் மேற்பட்டோர், உள்நாட்டிலேயே புலம் பெயர நேர்ந்தது. இதைத் தவிர, பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
போராட்டம் தீவிரமடைந்தாலும், ஆசாத்தின் கட்டுப்பாடுகள் குறையவில்லை. இந்நிலையில், அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின் ஒரு பகுதியான, எச்.டி.எஸ்., எனப்படும் ஹயாத் தாஹ்ரிர் அல்ஷாம் என்ற பிரிவினைவாத அமைப்பு தலைமையிலான அரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிப் படைகள், கடந்த மாதம், 27ம் தேதி தீவிர தாக்குதலை துவங்கின.
அலெப்போ நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சிப் படைகள், நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான ஹாம்ஸ் நகரையும் சுற்றி வளைத்தன.
இதைத் தொடர்ந்து, டாரா, குனேத்ரா, சுவேடா ஆகிய நகரங்களையும் கைப்பற்றின. இதைத் தொடர்ந்து, தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றும் நோக்கத்தோடு, படைகள்
முன்னேறின. மிக வேகமாக இந்தப் படைகள் முன்னேறின.
எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், சிரியா ராணுவம், போலீசார், டமாஸ்கசில் இருந்து வெளியேறினர். இதையடுத்து, நேற்று காலையில், டமாஸ்கசை கைப்பற்றியதாக கிளர்ச்சிப் படைகள் அறிவித்தன. இதற்கிடையே, அதிபர் ஆசாத், விமானம் வாயிலாக தப்பிச் சென்றார். இதையடுத்து, நாட்டின் நிர்வாகம் தங்களுடைய கட்டுப்பாட்டுகள் வந்துள்ளதாக கிளர்ச்சிப் படைகள் தெரிவித்தன.
ஆனால் ஆசாத் எந்த நாட்டுக்குச் சென்றார் என்ற தகவல் வெளியாகவில்லை. இதற்கிடையே, அவர் சென்ற விமானம், விபத்தில் சிக்கியதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
அதிபர் மாளிகை சூறை
ஆசாத் குடும்பத்தின் கட்டுப்பாட்டில், 54 ஆண்டுகளாக இருந்த சிரியாவுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாக, கிளர்ச்சி படை செய்தி வெளியிட்டது. சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தனர்.
நாட்டின் நிர்வாகம் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு அனைத்து ஒத்துழைப்புகளும் அளிப்பதாக, சிரியா பிரதமர் முகம்மது காஜி ஜலாலி அறிவித்தார்.
இதற்கிடையே, ஆசாத் வெளியேறியது, நாட்டை கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றிய தகவல் வெளியாகி, மக்கள் சாலைகளில் குவிந்து கொண்டாடினர். ஆசாத் மற்றும் அவருடைய தந்தை ஹபீஸ் அல் ஆசாத்தின் சிலைகள், போஸ்டர்கள், பேனர்கள், பதாகைகளை அவர்கள் சேதப்படுத்தினர்.
அதிபர் மாளிகைக்குள் நுழைந்த ஒரு கும்பல், அங்கிருந்த ஆசாத் மற்றும் அவருடைய தந்தையின் படங்களை சேதப்படுத்தினர். அதிபர் மாளிகையை அவர்கள் சூறையாடினர். ராணுவ அமைச்சகத்துக்குள்ளும் நுழைந்த ஒரு கும்பல், அதை சூறையாடியது.
தற்போதைக்கு அதிபர் ஆசாத் வெளியேறியுள்ளார். கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டில் தலைநகர் உட்பட நாடு வந்துள்ளது. ஆனால், புதிய அரசு எவ்வாறு அமைக்கப்பட உள்ளது என்பது மிகப் பெரும் கேள்வியாக அமைந்துள்ளது.

