ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து தீர்மானம் : துணை நிலை கவர்னர் ஒப்புதல்
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து தீர்மானம் : துணை நிலை கவர்னர் ஒப்புதல்
ADDED : அக் 19, 2024 08:44 PM

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் தீர்மானத்திற்கு துணை நிலை கவர்னர் ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ல் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.
இந்நிலயில் 90 தொகுதிகளை கொண்ட ஜம்மு - காஷ்மீருக்கு கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. தேசிய மாநாடு கட்சி 42 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆறு இடங்களிலும் வெற்றி பெற்றன. பா.ஜ., 29 தொகுதிகளை பிடித்தது. தேசிய மாநாடு கட்சியின் ஒமர் அப்துல்லா கடந்த 16-ம் தேதி பதவியேற்றார்.
இந்நிலையில் அக்.,18 தேசிய மாநாடு கட்சியின் முதல் அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது துணை நிலை கவர்னர் மனோஜ் சின்கா ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக மாநில அந்தஸ்தை வலியுறுத்தி முதல்வர் ஒமர் அப்துல்லா விரைவில் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த உள்ளதாக தேசிய மாநாடு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.