உலக கோப்பை வில்வித்தையில் உலக சாதனை: ‛‛வச்ச குறி' தப்பாத இந்திய ஜோடி
உலக கோப்பை வில்வித்தையில் உலக சாதனை: ‛‛வச்ச குறி' தப்பாத இந்திய ஜோடி
ADDED : ஜூலை 09, 2025 03:06 PM

மாட்ரிட்: உலக கோப்பை வில்வித்தை போட்டியில் கூட்டு கலப்பு அணி பிரிவில் இந்திய ஜோடியான ரிஷப் யாதவ், ஜோதி சுரேகா ஒட்டுமொத்தமாக 1431 புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்துள்ளது.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்த உலக கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 4) போட்டியில் கூட்டு கலப்பு அணி பிரிவில் இந்திய ஜோடியான ரிஷப் யாதவ், ஜோதி சுரேகா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியாக அதிக புள்ளிகளை பெற்ற ஜோடி என்ற உலக சாதனையையும் படைத்துள்ளனர். ரிஷப், 72 அம்புகளில் 68 அம்புகள் 10 புள்ளிகளை 'குறி' பார்த்து எய்தி அசத்தினார். மொத்தத்தில் இவர் மட்டும் 716 புள்ளிகள் பெற்றார். இவரது அணியை சேர்ந்த ஜோதியும் 68 அம்புகள் 10 புள்ளிகளை 'குறி' வைத்து, மொத்தத்தில் 715 புள்ளிகளை பெற்றார். இது இவர்களின் தனிப்பட்ட சிறந்த செயல்பாடாகவும் பதிவானது.
ஒட்டுமொத்தத்தில் இவர்கள் அணியாக 1431 புள்ளிகளை பெற்று உலக சாதனை படைத்தனர். இதற்கு முன்னதாக 2023ம் ஆண்டு கிராகோவ்-மலோபோல்ஸ்கா ஐரோப்பிய விளையாட்டுப் போட்டிகளில் டென்மார்க்கின் டான்ஜா கெல்லன்தியன் மற்றும் மத்தியாஸ் புல்லர்டன் ஆகியோர் பெற்ற 1429 புள்ளிகளே உலக சாதனையாக இருந்தது. அதனை தற்போது இந்திய ஜோடி முறியடித்துள்ளது. மேலும், குவாங்ஜு 2025 உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்காக இந்த ஜோடி தகுதி பெற்றுள்ளது.