தொடர்ந்து 14வது முறையாக ஆட்சியை பிடித்த ஆளுங்கட்சி : சிங்கப்பூர் தேர்தல்
தொடர்ந்து 14வது முறையாக ஆட்சியை பிடித்த ஆளுங்கட்சி : சிங்கப்பூர் தேர்தல்
ADDED : மே 05, 2025 01:04 AM

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பார்லிமென்டுக்கு நடந்த தேர்தலில், ஆளும் பி.ஏ.பி., எனப்படும் மக்கள் செயல் கட்சி, தொடர்ந்து 14வது முறையாக ஆட்சியை பிடித்தது. அக்கட்சியின் லாரன்ஸ் வாங் மீண்டும் பிரதமராகிறார்.
சிங்கப்பூரில் பார்லிமென்ட் தேர்தல் சமீபத்தில் நடந்தது. நேற்று இதன் ஓட்டுகள் எண்ணப்பட்டன.
இந்த தேர்தலில் மொத்தமுள்ள 97 இடங்களில், ஆளும் பி.ஏ.பி., 87ல் வென்றது. கடந்த 2020 தேர்தலில், 61.2 சதவீத ஓட்டுகள் பெற்றிருந்த நிலையில், 65.6 சதவீத ஓட்டுகளை தற்போது பி.ஏ.பி., பெற்றுள்ளது.
பிரதமர் லாரன்ஸ் வாங், கட்சிக்கு இமாலய வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார்.
கடந்த, 1965ல் நாடு சுதந்திரம் பெற்ற பின் நடந்துள்ள, 14 தேர்தல்களிலும், பி.ஏ.பி., கட்சியே வென்று தொடர்ந்து ஆட்சியைப் பிடித்துள்ளது.
''அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை இது மீண்டும் உறுதி செய்வதாக உள்ளது,'' என, தேர்தல் முடிவுகள் வெளியான பின், வாங் குறிப்பிட்டார்.
''இந்த தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு இடையேயானது அல்ல. சர்வதேச அளவிலான சவால்களையும் அதை சிங்கப்பூர் எப்படி எதிர்கொள்கிறது என்பதற்கான தேர்தல். இதில் திடமான உறுதியை சிங்கப்பூர் காட்டியுள்ளது,'' என, அவர் மேலும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, 20 ஆண்டுகள் பிரதமராக இருந்த லீ ஹசைன் லாங்க், கடந்தாண்டு மே மாதம் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து, 52 வயதான வாங் பிரதமரானார். தற்போது ஆளுங்கட்சி வெற்றி பெற்றதன் வாயிலாக, மீண்டும் அவர் பிரதமராக பதவியேற்கஉள்ளார்.
முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, தன், 10 தொகுதிகளை தக்க வைத்துள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதிக்கான வரி போர் மற்றும் அதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கங்களுக்கு இடையே, சிங்கப்பூர் இந்த தேர்தலை சந்தித்தது.
மேலும், அங்கு விலைவாசி உயர்வு மற்றும் வீடுகளுக்கான விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் தீவிர பிரசாரத்துக்கு இடையே பி.ஏ.பி., மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ' சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்கிற்கு வாழ்த்துகள். தமிழ் மக்களுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணி, தமிழ் மொழியையும் பண்பாட்டையும் உயர்த்திப் பிடிக்கிறார். அவரது முயற்சிகள் அனைவரையும் அரவணைக்கும் சிங்கப்பூரின் தன்மையை வெளிப்படுத்துகிறது' என, தெரிவித்துள்ளார்.