போர் விமானம் தயாரிப்பு தொழில்நுட்பம்: இந்தியாவுக்கு தர ரஷ்யா ஒப்புதல்
போர் விமானம் தயாரிப்பு தொழில்நுட்பம்: இந்தியாவுக்கு தர ரஷ்யா ஒப்புதல்
ADDED : நவ 19, 2025 10:51 PM

மாஸ்கோ : 'சுகோய் -57' என்ற ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு, அனைத்து தொழில்நுட்பங்களையும் முழுமையாக வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா அதிரடியாக அறிவித்துள்ளது.
நம் நாட்டு விமானப்படையின் திறனை அதிகரிக்க ராணுவ அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.ஆனால் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை வைத்திருக்கும் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் தொழில்நுட்பம் தர மறுப்பதாலும், தடைகள் வந்தால் விமானத்தின் பாகங்கள் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் உள்ளது.
இந்தநிலையில், தங்கள் நாட்டின் சுகோய் - -57 ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை இந்தியாவில் தயாரிக்க அனைத்து தொழில்நுட்பங்களையும் முழுமையாகத் தரத் தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் நடைபெறும் விமான கண்காட்சியில் பேசிய, ரஷ்ய அரசு ஆயுத ஏற்றுமதி நிறுவனமான 'ரோசொபோரோன் எக்ஸ்போர்ட்ஸ்' உயரதிகாரி இதை தெரிவித்துள்ளார்.
நாங்கள் 60 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பகமான உறவைக் கொண்டுள்ளோம். எந்த தடை வந்தாலும் ஒருபோதும் கைவிட மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார். ரஷ்யா அளித்த ஒப்புதல்படி, முதலில் அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட சுகோய்- - 57 போர் விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படும். அதே நேரம் இந்தியாவிலும் படிப்படியாக உற்பத்தி தொடங்கப்படும். அனைத்து முக்கிய உதிரிபாகங்களும் இந்தியாவிலேயே தயாராகும் வகையில் 100 சதவீதம் தொழில்நுட்பப் பரிமாற்றம் செய்யப்படும்.
எதிர்காலத்தில் இந்தியத் தேவைக்கேற்ப விமானத்தை மேம்படுத்தவும் ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.
ரஷ்யா சென்றுள்ள நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவைச் சந்தித்து பேசினார். அதே சமயம் ரஷ்ய கடல் விவகார வாரியத் தலைவர் நிகோலாய் பத்ருஷேவ், பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் சந்தித்தார். இந்தநிலையில் ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் புடின் அடுத்த மாதம் இந்தியா வரும்போது இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது, நம் விமானப்படையின் எதிர்காலத்தை மாற்றியமைக்கக்கூடிய மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தமாக உருவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

