ADDED : டிச 26, 2024 12:40 AM

கீவ் : உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில், அந்நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் 'ட்ரோன்'கள் வாயிலாக ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தினர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், 'நேட்டோ' அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா, 2022ல் அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. இரு ஆண்டுகளை கடந்து, இரு நாடுகளுக்கு இடையே மோதல் தொடர்கிறது. இதில், இருதரப்பிலும் நுாற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனின் அனல்மின் நிலையங்கள் உட்பட எரிசக்தி கட்டமைப்புகள் நிறைந்த கார்கிவ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை குறிவைத்து, ரஷ்ய படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர்.
'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா விமானங்கள் வாயிலாக இத்தகைய தாக்குதல்களை ரஷ்யா அரங்கேற்றியதாக அந்நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் கூறுகையில், 'உலகம் முழுதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் தருணத்தில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
'உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் நிறைந்த பகுதிகளை குறிவைத்து 70க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் வாயிலாக தாக்குதலை ரஷ்யா தொடுத்துள்ளது.
'இதைவிட மனிதாபிமானமற்ற செயல் இருக்க முடியுமா? உக்ரைனை அழிக்கும் நோக்குடன் இத்தகைய தாக்குதல்களை ரஷ்யா அரங்கேற்றி வருகிறது. இதில், பல ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை எங்கள் படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தினர்' என, குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்திய பகுதிகளில் வசித்த மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதால், பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இதனால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
எனினும், அனல்மின் நிலையங்களை குறிவைத்து ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தியதால், ஏராளமான நகரங்கள் இருளில் மூழ்கின.