ரஷ்யா, சீனா உதவிக்கு வாங்க! பாகிஸ்தான் தினம், தினம் புது கதை
ரஷ்யா, சீனா உதவிக்கு வாங்க! பாகிஸ்தான் தினம், தினம் புது கதை
ADDED : ஏப் 28, 2025 06:34 AM

லாகூர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், பாகிஸ்தான் பங்கு குறித்து இந்தியா வலுவான வாதம் வைத்துள்ள நிலையில் அதை ஏற்றுக்கொள்ள தயங்கும் பாகிஸ்தான் தினமும் புது கதைகளை பேசி, புது கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீர், காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஆதரித்து தொடர்ந்து பேசி வருகிறார். ''காஷ்மீர் எங்களது கழுத்து நரம்பு,'' என கொக்கரித்து வருகிறார்.
ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப், 'நாங்கள் தான் பல ஆண்டுகளாக பயங்கரவாதிகளுக்கு ஆயுதம், நிதியுதவி அளித்து வருகிறோம்' என்கிறார்.
பிரதமர் ஷாபாஸ் ஷெரிப், சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் என மிரட்டுகிறார். மேலும், தங்கள் மீதான குற்றச்சாட்டை ஏற்காமல், 'நடுநிலை விசாரணைக்கு தயார்' என்கிறார்.
தற்போது ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப், ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: இந்திய - பாக்., இடையே எப்போதும் பிரச்னை இருந்து கொண்டு தான் உள்ளது. குறிப்பாக, அந்த எல்லைப்பகுதியில் இன்று, நேற்றல்ல, 1,500 ஆண்டுகளாகவே பதட்டம் இருக்கிறது.
பிரதமர் மோடி உட்பட இந்தியர்கள் பொய் பேசி வருகின்றனர். அவர்கள் உண்மை தான் சொல்கின்றனரா என அறிய, நாம் நடுநிலை விசாரணை நடத்த வேண்டும்.
ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்த விசாரணையில் பங்கேற்க வேண்டும். குற்றவாளி யார், இதன் பின்னணியில் யார் என அறிய, ஒரு சர்வதேச குழு விசாரணை நடத்த வேண்டும். இவ்விஷயத்தில் வெறும் பேச்சு மற்றும் வெற்று அறிக்கைகள் போதாது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

