உக்ரைன் மீது 149 ட்ரோன்களை வீசி திடீர் தாக்குதல் நடத்திய ரஷ்யா; பேச்சை மீறியதால் டிரம்ப் அதிருப்தி
உக்ரைன் மீது 149 ட்ரோன்களை வீசி திடீர் தாக்குதல் நடத்திய ரஷ்யா; பேச்சை மீறியதால் டிரம்ப் அதிருப்தி
ADDED : ஏப் 28, 2025 06:25 AM

மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான சண்டையை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களிடம் போர் நிறுத்தம் குறித்து தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார். ரஷ்யாவின் நிபந்தனைகளை உக்ரைன் ஏற்காததை அடுத்து, அந்நாட்டின் மீது மீண்டும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
அடுத்தடுத்து நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு சமீபத்தில் கண்டனம் தெரிவித்த டிரம்ப், தாக்குதல்களை நிறுத்தும்படி புடினிடம் கூறியிருந்தார்.
உக்ரைனால் கைப்பற்றப்பட்ட குர்ஸ்க் பகுதியில், ரஷ்யா நேற்று மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியது. இரவோடு இரவாக, 149 ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் ஒருவர் பலியானார். சிறுமி உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை கைப்பற்றியதாக உக்ரைன் அறிவித்த நிலையில், சில நாட்களுக்கு முன் அப்பகுதி மீட்டெடுக்கப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சு நடந்து வரும் சூழலில் பொதுமக்கள் பலியாகும் வகையில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவது டிரம்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.