2வது முறையாக பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் ஷெபாஷ் ஷெரீப்
2வது முறையாக பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் ஷெபாஷ் ஷெரீப்
ADDED : மார் 04, 2024 04:41 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக 2வது முறையாக ஷெபாஷ் ஷெரீப் பதவியேற்றார். அவருக்கு பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் டாக்டர் ஆரிப் அல்வி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பாகிஸ்தான் பார்லிமென்டிற்கு பிப்.,8 ல் பொதுத்தேர்தல் நடந்தது. அதில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களைக் கைப்பற்றினர். நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல் - என் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் குழப்பம் ஏற்பட்டது.
இதனையடுத்து பிற கட்சிகளின் ஆதரவுடன் பிஎம்எல்- என் கட்சி புதிய அரசை அமைக்க தீர்மானித்தது. அக்கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். இம்ரான் கான் கட்சி சார்பில் ஒமர் அயூப் கான் முன்னிறுத்தப்பட்டார்.
அந்நாட்டின் பார்லிமென்டில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான ஓட்டுப்பதிவு நடந்தது. அதில் ஷெபாஸ் ஷெரீப்புக்கு 201 ஓட்டுகள் கிடைத்தன.
இதையடுத்து, ஷெபாஷ் ஷெரீப் வெற்றி பெற்றதாக சபாநாயகர் சர்தார் ஆயாஸ் சாதிக் அறிவித்தார். பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக ஷெபாஷ் ஷெரீப் இன்று(மார்ச்.,04) பதவியேற்றார். அதிபர் மாளிகையில் நடைந்த பதவியேற்பு விழாவில் பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் டாக்டர் ஆரிப் அல்வி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

