தொடர்ந்து நான்காவது முறையாக பிரதமராகிறார் ஷேக் ஹசீனா வங்கதேச தேர்தல்
தொடர்ந்து நான்காவது முறையாக பிரதமராகிறார் ஷேக் ஹசீனா வங்கதேச தேர்தல்
ADDED : ஜன 09, 2024 12:07 AM

டாக்கா: வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆவாமி லீக் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, தொடர்ந்து நான்காவது முறையாக அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் நேற்று முன்தினம் பொதுத் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 300 தொகுதிகளில், ஒரு தொகுதியில் வேட்பாளர் உயிரிழந்ததை அடுத்து, 299 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.
'பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தால், தேர்தல் நியாயமாக நடைபெறாது' எனக் கூறி, இத்தேர்தலை, பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின், பி.என்.பி., எனப்படும் பங்களாதேஷ் தேசியவாத கட்சி புறக்கணித்தது. மேலும் 15 அரசியல் கட்சிகளும் இத்தேர்தலை புறக்கணித்தன.
இதன் காரணமாக, வங்கதேசத்தில் பெரும்பாலான ஓட்டுச்சாவடிகள் வாக்காளர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இத்தேர்தலில், வெறும் 40 சதவீத ஓட்டுகளே பதிவாகின.
கடந்த 1991ம் ஆண்டுக்கு பின், வங்கதேச பார்லி., தேர்தலில் பதிவாகிய, இரண்டாவது குறைந்தபட்ச ஓட்டுப்பதிவு இது.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் பதிவான ஓட்டுகள் உடனடியாக எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 299 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 223ல், ஆளும் ஆவாமி லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
கோபால்கஞ்ச்- - 3 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதமர் ஷேக் ஹசீனா, தொடர்ந்து எட்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
பார்லி.,யில் முக்கிய எதிர்க்கட்சியான ஜாதியா கட்சி 11 இடங்களிலும், பங்களாதேஷ் கல்யான் கட்சி ஒரு தொகுதியிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 62 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த 2009 முதல், வங்கதேசத்தை ஆட்சி செய்து வரும் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்த வெற்றியின் வாயிலாக, தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இதற்கு முன், 1996ல் நடந்த தேர்தலில் இவர் வெற்றி பெற்று பிரதமரானார். ஒட்டு மொத்தமாக தற்போது ஐந்தாவது முறையாக பிரதமராக அவர் பதவியேற்கவுள்ளார்.
மேலும், சுதந்திரத்திற்குப் பின் வங்கதேசத்தில் அதிக காலம் பதவி வகித்த பிரதமர் என்ற பெருமையை ஷேக் ஹசீனா பெற்றுள்ளார்.