லண்டன் இஸ்கான் உணவகத்தில் அசைவ உணவை சாப்பிட்ட நபர்; அதிர்ச்சி சம்பவம்
லண்டன் இஸ்கான் உணவகத்தில் அசைவ உணவை சாப்பிட்ட நபர்; அதிர்ச்சி சம்பவம்
ADDED : ஜூலை 20, 2025 08:57 PM

லண்டன்: லண்டனில் உள்ள இஸ்கான் உணவகத்தில் தடையை மீறி அசைவ உணவை சாப்பிட்ட நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இஸ்கான் எனப்படும் சர்வதேச கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சார்பில் லண்டனில் உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க சைவ உணவுகளை மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த உணவகத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஆப்ரிக்கா மற்றும் பிரிட்டீஷ் வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர், இஸ்கானின் கோவிந்தா உணவகத்திற்குள் நுழைந்து, அசைவ உணவை கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்த உணவக ஊழியர், இங்கு அசைவ உணவுகள் கிடையாது என்று கூறியுள்ளார். உடனே, அந்த நபர் கே.எப்.சி., சிக்கனை எடுத்து உணவகத்திற்குள்ளேயே சாப்பிடத் தொடங்கியுள்ளார். மேலும், அந்த அசைவ உணவை அந்த ஊழியர்களுக்கும் கொடுக்க முன்வந்துள்ளார்.
இதனை பார்த்த பிற வாடிக்கையாளர்கள், தடையை மீறி அசைவ உணவை சாப்பிடுகிறாயா? என்று கேட்டு, உடனடியாக காவலாளியை அழைத்து, அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றினர்.
இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று தெரியாத நிலையில், தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத நம்பிக்கையை கெடுக்கும் விதமாக நடந்து கொள்ளலாமா? என்று கேள்வியையும், கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.