இரண்டாவது டெஸ்ட்: இரட்டை சதம் விளாசினார் சுப்மன் கில்
இரண்டாவது டெஸ்ட்: இரட்டை சதம் விளாசினார் சுப்மன் கில்
UPDATED : ஜூலை 03, 2025 11:41 PM
ADDED : ஜூலை 03, 2025 07:27 PM

பர்மிங்ஹாம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.
இரண்டாவது டெஸ்ட் பர்மிங்ஹாமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் ' பவுலிங் ' தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் சுப்மன் கில் (114), ஜடேஜா(41) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்த சதம் மூலம், டெஸ்ட் அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 3 டெஸ்டில் சதம் விளாசியவர் என்ற பெருமை சுப்மன் கில்லுக்கு கிடைத்து இருந்தது.
இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. ஜடேஜா 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பிறகு ஜோடி சேர்ந்த சுப்மன் கில் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர். அதிரடி காட்டிய சுப்மன் கில் 310 பந்துகளில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் குவித்துள்ளது. சுப்மன் கில் 269 ரன்களும்,ரவீந்திர ஜடேஜா 89 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 42 ரன்கள் எடுத்தனர்.
மேலும், விராட் கோஹ்லிக்கு பிறகு வெளிநாட்டில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் சுப்மன் கில்லுக்கு கிடைத்து உள்ளது.
கேப்டனாக விராட் கோஹ்லி 7 இரட்டை சதமும், பட்டோடி, கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், தோனி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஒரு இரட்டை சதமும் அடித்துள்ளனர்.
மேலும், இளம் வயதில் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன்கள் என்ற வரிசையில் பட்டோடி, சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி ஆகியோருடன் சுப்மன் கில்லும் இடம்பெற்றுள்ளார்.
இங்கிலாந்து அணி பேட்டிங்
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்துள்ளது.