ADDED : ஜன 10, 2025 11:56 PM

லியான்:வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத சொத்துக்களை கண்டறியும் முயற்சியாக, முதன்முறையாக 'சில்வர் நோட்டீஸ்' வழங்கும் முறையை இன்டர்போல் போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பில், 195 நாடுகள் இடம் பெற்றுஉள்ளன. இதன் தலைமை அலுவலகம் ஐரோப்பிய நாடான பிரான்சின் லியான் நகரில் செயல்படுகிறது.
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் சர்வதேச குற்றவாளிகளை பிடிப்பதற்கு இந்த அமைப்பு உதவுகிறது. இது தவிர, சர்வதேச அளவில் நடக்கும் குற்றங்கள், முக்கிய குற்றவாளிகள் உள்ளிட்ட விபரங்கள் இந்த அமைப்பில் உள்ள நாடுகளிடையே பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
விசாரணையின்போது, குற்றச் சம்பவம் தொடர்பாக பல்வேறு நோட்டீஸ்களை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக இன்டர்போல் அமைப்பு வெளியிட்டு வருகிறது. தேடப்படும் நபர் என்றால் ரெட் நோட்டீஸ், மாயமானவர்களை கண்டுபிடிக்க 'யெல்லோ நோட்டீஸ்' போன்றவை வெளியிடப்படுகின்றன.
இதுவரை, எட்டு வண்ணங்களில் உள்ள நோட்டீஸ்கள் புழக்கத்தில் உள்ளன.
இவற்றைத் தொடர்ந்து, குற்றவாளிகளால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத சொத்துக்களை கண்டறியவும், அதை கண்டுபிடிக்கவும், 'சில்வர் நோட்டீஸ்' முறையை இன்டர்போல் அமைப்பு அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து, அதன் பொதுச் செயலர் வால்டெசி உர்குயிசா கூறியதாவது:
வெளிநாடுகளில் உள்ள சட்டவிரோத சொத்துக்கள் குறித்த விசாரணை தொடர்பாக சில்வர் நோட்டீஸ் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளையும், அவர்களின் சட்டவிரோத வலைப்பின்னல்களையும் முறியடிக்க இந்த முறை உதவும். இதுவரை நடந்துள்ள விசாரணையில், 99 சதவீத குற்றவியல் சொத்துக்கள் மீட்கப்படாமல் இருப்பதை கருத்தில் வைத்து, இந்த முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
சொத்துக்கள், வாகனங்கள், நிதிக் கணக்குகள் மற்றும் வணிகங்கள் உள்ளிட்ட மோசடி செய்யப்பட்ட சொத்துக்கள் பற்றிய தகவல்களைக் கண்டறியவும், அவற்றை மீட்கவும் சில்வர் நோட்டீஸ் முறை உதவும். சோதனை முறையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில், இந்தியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 52 நாடுகளில் நடந்த மோசடிகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.