சிங்கப்பூர் முன்னாள் மந்திரிக்கு ஓராண்டு சிறை தண்டனை
சிங்கப்பூர் முன்னாள் மந்திரிக்கு ஓராண்டு சிறை தண்டனை
ADDED : அக் 04, 2024 12:06 AM

சிங்கப்பூர்: சிங்கப்பூரில், கடந்த 2006ல் அமைச்சராக இருந்தவர் ஈஸ்வரன், 62. கடந்த 1962ல் சென்னையில் பிறந்த இவர், சிறு வயதிலேயே சிங்கப்பூரில் குடியேறினார். பின், 1997ல் அந்நாட்டு எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார்.
லீ ஹெய்ன் அமைச்சரவையில் வர்த்தக உறவுகளுக்கான அமைச்சராகவும், போக்குவரத்து துறை அமைச்சராகவும் பதவி வகித்த ஈஸ்வரன், பிரிமீயல் லீக் கால்பந்து போட்டிகள், சிங்கப்பூர் பார்முலா - 1 கிராண்ட் பிரிக்ஸ், லண்டன் மியூசிக்கல்ஸ் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வணிகர்களிடம் இருந்து 4,00,000 லட்சம் சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள ஆடம்பரமான பரிசுப் பொருட்களை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
முதலில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த ஈஸ்வரன், கூறப்பட்ட 35 குற்றச்சாட்டுகளில் ஆடம்பர பரிசுப் பொருட்கள் பெற்றது உட்பட ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
இதில், கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் விலக்கப்பட்ட நிலையில், பரிசு பொருட்களை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் மட்டும் அவர் குற்றவாளி என்று, சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு, 12 மாதம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு அவரை ஜாமினில் இருக்க அனுமதித்துள்ள நீதிமன்றம், வரும் 7ம் தேதி முதல் சிறை தண்டனையை துவங்க உத்தரவிட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டு காலத்தில் சிங்கப்பூரில், முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு எதிராக இத்தகைய வழக்கு பதிவு செய்யப்படுவதும், தண்டிக்கப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.