மீண்டும் பயன்படுத்தும் ராக்கெட் `ஸ்பேஸ் எக்ஸ்' முயற்சி தோல்வி
மீண்டும் பயன்படுத்தும் ராக்கெட் `ஸ்பேஸ் எக்ஸ்' முயற்சி தோல்வி
UPDATED : நவ 14, 2026 08:12 PM
ADDED : நவ 14, 2026 08:12 PM

டெக்சாஸ்: விண்ணுக்கு செலுத்தும் ராக்கெட்டை, மீண்டும் பயன்படுத்தும் வகையில், பத்திரமாக தரையிறக்கும், `ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் புதிய முயற்சி தோல்வியில் முடிந்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் பணக்கார தொழிலதிபரான எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், விண்வெளி துறையில் பல சாதனைகளை படைத்து வருகிறது.
இந்நிலையில், ராக்கெட்களை மீண்டும் பயன்படுத்தும் நோக்கில் சோதனைகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே, இதற்கு முன் மூன்று சூப்பர் ஹெவி பூஸ்டர்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து, சூப்பர் ஹெவி வி – 3 ரக பூஸ்டரில் இத்தகைய சோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், `ஸ்டார்ஷிப்' எனப்படும், 406 அடி உயரமுள்ள பிரமாண்ட ராக்கெட்டின், 16வது சோதனை நேற்று நடந்தது. இது இரண்டு பிரிவுகளைக் கொண்டது. மேல்பகுதி, செயற்கைகோள்களைக் கொண்ட ராக்கெட்டாகும். கீழ்பகுதி, அதை உந்த வைக்கும் பூஸ்டர் எனப்படும் இன்ஜினுடன் கூடியது.
ராக்கெட்டின் முதல் நிலையில் உள்ள பூஸ்டரையும், இரண்டாம் நிலையில் உள்ள ராக்கெட்டையும் மறுபயன்பாட்டுக்காக பூமியில் பத்திரமாக தரையிறங்க வைப்பது திட்டமாகும். அவ்வாறு இறங்கும் ராக்கெட் பாகங்களை, `சாப்ஸ்டிக்' எனப்படும் ஏவுதளத்தில் உள்ள இயந்திர கைகளால் பிடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
நேற்று, செயற்கைகோள் இணையசேவை வழங்கும், தன், `ஸ்டார்லிங்க்' நிறுவனத்துக்காக, 26 செயற்கைகோள்களுடன் இந்த ராக்கெட்டை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அனுப்பியது.
திட்டமிட்டபடி, செயற்கைகோள்களுடன் கூடிய ராக்கெட்டின் மேல்பகுதி, வளிமண்டலத்துக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.
ஆனால், பூஸ்டர் உடன் கூடிய கீழ்பகுதி பூமிக்கு திரும்பும்போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அது திசை திருப்பப்பட்டு, மெக்சிகோ வளைகுடாவில் இறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அது கடலில் விழுவதற்கு முன் வெடித்து சிதறியது.
இதனால், முதல்நிலை பூஸ்டரை பிடிக்கும் இலக்கு தோல்வி அடைந்தது. இருப்பினும், இரண்டாம் நிலையில் உள்ள ஸ்டார்ஷிப் ராக்கெட் வெற்றிகரமாக தன் சுற்றுப்பாதையை அடைந்ததுடன், 26 ஸ்டார்லிங்க் செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது. பூமியை 14 முறை சுற்றி வந்த பின், இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக தரையிறக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
