அமைதி பேச்சு நடக்கும்போதே ரஷ்யா – உக்ரைன் இடையே தாக்குதல்
அமைதி பேச்சு நடக்கும்போதே ரஷ்யா – உக்ரைன் இடையே தாக்குதல்
UPDATED : நவ 14, 2026 07:44 PM
ADDED : நவ 14, 2026 07:39 PM
கீவ்: ரஷ்யாவும், உக்ரைனும் பரஸ்பர தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், சமீபத்தில் அபுதாபியில் நடந்த அமைதி பேச்சு தோல்வியில் முடிவடைந்துவிட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. போரை நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்கா மத்தியஸ்தத்துடன் முத்தரப்பு பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த 10 மற்றும் 11ம் தேதிகளில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில், முத்தரப்பு பேச்சு நடந்தது.
இரண்டு நாள் பேச்சைத் தொடர்ந்து, அதில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க பிரிதிநிதிகள் விளக்கினர். அமெரிக்க குழுவின் பயணத்தின்போதே, நேற்று முன்தினம் இரவு ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பெரும்பாலானவற்றை இடைமறித்து அளித்ததாகவும் ரஷ்யா தெரிவித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யா, உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் அங்குள்ள குடியிருப்புகள் சேதமடைந்ததுடன், பலர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
ஒருபுறம் அமைதி பேச்சை தொடர்ந்தாலும், மறுபுறம் பரஸ்பர தாக்குதல்களை இரு தரப்பினரும் மேற்கொண்டு வருவது சமீபத்தில் நடந்த அபுதாபி அமைதி பேச்சு தோல்வியில் முடிந்துவிட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
