ADDED : ஜூலை 25, 2011 09:22 PM
கொழும்பு : 'இலங்கையில், சிறுபான்மைத் தமிழர்கள் குறித்து இனியாவது, இலங்கை அரசும், சர்வதேச சமூகமும் பேச வேண்டும் என்பதைத் தான், சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன' என, முன்னாள் எம்.பி., சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடபகுதியில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில், தமிழ் தேசிய கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிபர் ராஜபக்ஷேவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி படுதோல்வி அடைந்தது.
இது குறித்து முன்னாள் எம்.பி., சிவாஜிலிங்கம் கூறியதாவது: வடபகுதியில் தமிழ் தேசிய கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றது என்பது சாதாரண விஷயமல்ல. யாழ்ப்பாணத்தில் நடந்த பிரசாரத்தில் எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எங்கள் வேட்பாளர்கள் மிரட்டல்களைச் சந்தித்தனர். இவ்வளவு பிரச்னைகளையும் கடந்து, 18 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இனியாவது, தமிழர்களுடன் பேச்சு நடத்த இலங்கை அரசும், சர்வதேச சமூகமும் முன்வர வேண்டும் என்பதைத் தான், இந்த வெற்றி சுட்டிக் காட்டுகிறது. இவ்வாறு சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.