ADDED : டிச 17, 2025 12:45 AM

பிரேசிலியா: பிரேசிலில் வீசிய கடும் சூறாவளிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், உலக பிரசித்திப் பெற்ற சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்தது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில், 'ஹவன்' என்ற பிரபலமான பல்பொருள் அங்காடி கடைகள் உள்ளன.
இந்த நிறுவனம் பிரேசில் முழுதும் உள்ள தன் கடைகளில், அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையின் மாதிரிகளை நிறுவியுள்ளது.
இந்த நிலையில், மணிக்கு, 90 கி.மீ., வேகத்தில் புயல் காற்று வீசியபோது, பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் உள்ள கடையின் முன் அமைக்கப்பட்டிருந்த சுதந்திர தேவி சிலை திடீரென சரிந்து விழுந்தது. கடை ஊழியர்களும் அருகில் இருந்தவர்களும் உடனடியாக வாகனங்களை அப்புறப்படுத்தியதால், எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. இந்த சிலையின் மேல் பகுதி 78 அடி உயரமும், கீழ் கான்கிரீட் அடித்தளம் 36 அடி உயரமும் கொண்டது.

