இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: போர்க்களமாக மாறிய அமெரிக்க பல்கலை
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: போர்க்களமாக மாறிய அமெரிக்க பல்கலை
ADDED : ஏப் 28, 2024 11:59 AM

வாஷிங்டன்: காசாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து அமெரிக்காவில் பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து அந்த பகுதி போர்க்களம் போல காட்சி அளிக்கிறது. இதுவரை தடையை மீறி போராட்டம் நடத்தியதாக 550 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில், இஸ்ரேலை கண்டித்து மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இருப்பினும் பல்கலையின் விருப்பப்படி, கண்ணீர் புகை குண்டு மற்றும் ஆயுதங்களுடன் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக அப்பல்கலை ஊழியர் ஒருவர் கூறுகையில், போலீசார் வந்ததும் போராட்டக்காரர்களை வெளியேறும்படி கூறினர். அது போர்க்களம் போல் காட்சி அளித்தது. ஆயுதங்களையும், ரப்பர் புல்லட்களையும் போலீசார் கொண்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயற்சி செய்தனர் என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், காசாவில் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக இந்தப் போராட்டம் நீடிக்கிறது. இஸ்ரேல் ஆயுதம் வாங்க உதவும் வகையில் அந்நாட்டில் முதலீடு செய்வதை அமெரிக்க நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்றார்.
இதேபோல் பல பல்கலைக்கழகங்களிலும் போராட்டம் நடக்கிறது. போராட்டக்காரர்கள் அமைத்துள்ள கூடாரங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது இரு தரப்புக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

